430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி
நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது.
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது.
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 2:150 வசனம் கூறுகின்றது.
பயணம் செய்யும் போது கஅபாவை நோக்கியே பயணம் செய்ய வேண்டும்; வடக்கு, தெற்கு, கிழக்குத் திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது; அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் கஅபாவை மட்டுமே நோக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
இவ்வசனங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தக் கருத்தைச் சொல்வது போல் அமைந்திருந்தாலும் இது தொழுகை குறித்து அருளப்பட்ட வசனங்களே என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
திருக்குர்ஆனைச் சரியான முறையில் விளங்கிட நபிகள் நாயகம் அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358 ஆகிய குறிப்புகளையும் காண்க!