431. நிர்பந்தம் என்றால் என்ன?
தடை செய்யப்பட்டதைச் செய்தால் நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது.
பிறரால் கட்டாயப்படுத்தப்படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் நிர்பந்தம் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அன்றாட உணவுக்கு வழியில்லாத நிலையும் நிர்பந்தத்தில் அடங்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. தாமாகச் செத்தவை எந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாகும்?’ என்று நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.
நூல்கள் : அஹ்மத் 20893, 20896,
தாரமி 1912
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவோ, பால் போன்ற திரவ உணவோ, தாவர உணவோ கிடைக்காதவர்கள் தடை செய்யப்பட்டதை உண்ணலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ‘தாமாகச் செத்தவை எப்போது எங்களுக்கு ஹலாலாகும்?’ என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் உணவு என்ன?’ எனக் கேட்டனர். ‘காலையிலும், மாலையிலும் (சிறிதளவு) பால்’ என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகச் செத்தவற்றை அந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாக்கினார்கள்.
நூல் : அபூதாவூத் 3321
சாகும் தருவாயில் இருப்பது மட்டும் நிர்பந்தம் அல்ல. இரு வேளை உணவு கிடைக்காமல் இருப்பதும் நிர்பந்தமே. இந்த நிலையில் உள்ளவர்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணலாம்.
நிர்பந்தத்திற்கு ஆளானோர் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளைக் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘வலியச் செல்லாமலும்’ ‘வரம்பு மீறாமலும்’ என்பதே அந்த இரு நிபந்தனைகள்.
தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு, இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக் கூடாது. பஞ்சத்தில் அடிபட்ட பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.
நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக் கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும்; அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு தடை செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும்.
நிர்பந்த நிலையை அடைந்தவர்கள் இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டவற்றை உண்ணலாம். அதில் எந்தக் குற்றமுமில்லை.
இது போலவே இரத்தம் நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்போருக்கும், அறுவை சிகிச்சைக்குப் போதிய இரத்தமில்லாதவர்களுக்கும் மற்றவர்களின் இரத்தம் செலுத்தப்படுகிறது.
வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக தடை செய்யப்பட்டவைகளை உண்ணலாம் எனும் போது உயிரைக் காக்கும் சூழ்நிலையில் மற்றவர்களின் இரத்தத்தைச் செலுத்தலாம் என்பதற்கும் இவ்வசனங்கள் ஆதாரமாக உள்ளன. உயிர் காப்பதை விடப் பெரிய நிர்பந்தம் ஏதுமிருக்க முடியாது.