435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?

ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று இவ்விரு வசனங்களில் (24:32,33) முதல் வசனம் கூறுகிறது.

ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு இரண்டாம் வசனம் கூறுகிறது. இதனால் இவ்விரு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போல் தோன்றலாம்.

ஆனால் இவ்விரு வழிகாட்டுதலும் வெவ்வேறு நிலையில் உள்ளவர்களுக்கு உரியது என்பதால் இதில் முரண்பாடு இல்லை.

நம்மிடம் அடிமைகளாக இருப்பவர்களுக்கு நாம் நமது பொறுப்பில் திருமணம் செய்து வைத்தால் அதன் பிறகு அல்லாஹ் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்குவான் என்பது தான் முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அடிமைகளாக இருப்பவர்களுக்கு அவர்களின் எஜமானர்கள் தமது செலவில் திருமணம் செய்து வைத்தால் அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குரிய வசதியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான் என்பது இதன் கருத்து.

அடிமையாக இல்லாமல், தமது சொந்தச் செலவில் மஹர் உள்ளிட்டவற்றைக் கொடுத்து திருமணம் செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு அதற்கான வசதி இல்லாவிட்டால் அவர்கள் அதற்கான வசதி வரும் வரை மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது வசனத்தின் கருத்து.

திருமணம் செய்த பின் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான் என்பது இவர்களுக்கு உரியது தான்.

இரண்டும் வெவ்வேறு செய்திகளைக் கூறுவதால் இரண்டுக்கும் இடையே முரண்பாடு இல்லை.