441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்
இவ்வசனங்கள் (2:28, 3:27, 6:95) உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன.
உயிரற்ற பொருட்களில் இருந்து வேறு உயிரற்ற பொருட்கள் உருவாகியுள்ளன என்பதை நாம் அறிவோம்.
மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உயிருள்ளவற்றில் இருந்து உருவாவதாகத் தான் நாம் கருதுகிறோம். ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் பிறப்பதைப் பார்த்து நாம் இப்படிக் கருதுகிறோம்.
ஆனால் ஒவ்வொரு உயிரினத்தின் மூல உயிரினம் – அதாவது தாய் தந்தை – எந்த உயிரினத்தில் இருந்து உருவாயின? இதற்கு அறிவியல் சொல்லும் விடை என்ன? உயிரற்ற மூலப் பொருட்களில் இருந்து தான் அவை உருவாயின என்பது தான். (அது எப்படி உருவாகும் என்பதற்கு விடை காணப்படவில்லை.)
உயிரற்ற பொருட்கள் அனைத்தும் பல்வேறு வகையான உயிரற்ற பொருட்களின் திரட்சியால் உருவானவை. உயிரற்ற பொருட்களான ஒரு கல்லையோ, ஒரு துளி மண்ணையோ தனித்தனி பொருட்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு மூலகங்களாக வகைப்படுத்தலாம். இப்பேரண்டத்திலுள்ள அனைத்து உயிரற்ற பொருட்களும் இவ்வாறு மூலகங்களால் உருவானவைகள். உயிரற்ற பொருட்களில் மேற்கண்ட மூலகங்கள் தவிர வேறு எதுவும் காணப்படாது.
உயிரற்ற பொருட்களை இவ்வாறு பிரிப்பது போல் உயிருள்ளவற்றையும் இவ்வாறு பிரிக்கலாம். அப்படி பிரித்து எடுக்கும் போது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களிலும் மேற்கண்ட மூலகங்கள் தவிர வேறு எதுவும் இல்லை.
உயிர் உள்ளவை என்பதைக் காட்ட அதில் எந்த மூலகங்களும் இருக்காது. உயிரற்ற அந்த மூலகங்களில் இருந்து தான் உயிருள்ளவை உண்டாகியுள்ளன என்று இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பை திருக்குர்ஆன் ஆறாம் நுற்றாண்டிலேயே கூறி இது இறைவேதமே என்பதை நிரூபிக்கின்றது.
உயிரற்று இருந்த உங்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்தான் என்று இவ்வசனத்தில் (2:28) கூறப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் படைக்கப்படுவதற்கு முன் எங்கும் இருக்கவில்லை. எப்பொருளாகவும் இருக்கவில்லை. அந்த நிலை தான் இங்கே உயிரற்ற நிலை என்று குறிப்பிடப்படுகிறது. எதுவாகவும் இல்லாதிருந்த உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்பது இதன் கருத்தாகும்.
மேலும் உயிர் உருவாவதற்கு எந்த மூலகங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் எல்லாம் வல்ல இறைவனால் தான் உயிர் கொடுக்கப்பட்டது என்பதை மனிதன் சிந்தித்து உணர்வதற்காக இவ்வாறு இறைவன் கூறுகிறான்.
இது குறித்து மேலும் அறிய 347வது குறிப்பையும் பார்க்கவும்.