453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்

இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம், பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அப்படியானால் சொர்க்கமும், நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஅராஜ் பயணத்தின் போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது.

உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாலும், பச்சைநிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

ஆனால் உலகம் அழிக்கப்படும் போது வானம், பூமி, சொர்க்கம், நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்.

இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.

முதலில் படைத்து அதை அழித்து விட்டு மீண்டும் படைப்பவன் என்பதை அல்லாஹ் தனது தனிப்பண்பாகவே சொல்லிக் காட்டுகிறான்.

ஒரு பொருளை வாங்கி விட்டோமே அது உடைந்து விட்டால் இன்னொன்று வாங்க முடியுமா? அல்லது அதிக சிரமப்பட்டுத் தானே வாங்க முடியும் என்று மனிதன் நினைப்பான். ஆகு என்ற கட்டளை மூலம் ஆக்கும் வல்லமை பெற்ற இறைவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதால் அழித்து விட்டு மீண்டும் படைப்பதைப் பெருமையாகச் சொல்லிக் காட்டுகிறான். இதை 10:4, 10:34, 27:64, 29:19, 30:11, 30:27, 85:13 ஆகிய வசனங்களில் காணலாம்.

முதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இதில் சொர்க்கம் மட்டும் விதிவிலக்கு என்று எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.

ஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்; அந்த சொர்க்கத்துக்குத் தான் சொர்க்கவாதிகள் செல்வார்கள். இது தான் சரியான கருத்தாகும்.

உலகம் அழியும் போது வானமும், பூமியும் அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் உருவாக்கப்படும் என்று 14:48, 21:104 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானம் அழிக்கப்படும் என்பதில் சொர்க்கமும் அழிந்து விடும் என்ற கருத்தும், வானம் மீண்டும் படைக்கப்படும் போது சொர்க்கமும் மீன்டும் படைக்கப்படும் என்ற கருத்தும் அடங்கியுள்ளது.

மறுமையில் நல்லோருக்கு வழங்கப்படும் சொர்க்கம், வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று 3:133, 57:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானத்தில் தற்போது உள்ள சொர்க்கம் வேறு; வானத்தையும், பூமியையும் உள்ளடக்கும் அளவிலான சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.

உலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். பூமியில் இருந்து தான் எழுப்பப்படுவார்கள் என்று 20:55 வசனம் கூறுகிறது.

பூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குச் சான்று உள்ளது. எழுப்பப்பட்டு மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்தச் சான்றையும் காணவில்லை.

மேலும் இனி படைக்கப்படும் சொர்க்கம் பூமியில் தான் அமைக்கப்படும் என்பதை 18:47,48, 20:105-108, 39:68,69, 20:55, 7:25, 71:17,18, 30:25, 54:6,7,8 ஆகிய வசனங்கள் தெளிவாகவே சொல்கின்றன.

இந்தச் சான்றுகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது வானம் பூமி, சொர்க்கம், நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்பதும், அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும், பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும், மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப்படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும், அந்தப் பூமி வானம் பூமியை விட மிகப் பெரிதாக இருக்கும் என்பதும் தெரிகிறது.

சொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதற்கு எதிராக உரிய சான்று இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம்.