465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப் பொருளைப் போல் சித்தரிக்காமல் கணவனுக்கு மனைவி ஆடை எனவும், மனைவிக்கு கணவன் ஆடை எனவும் சொல்லி இருவருக்கும் சமமான பொறுப்புக்கள் உள்ளதை அல்லாஹ் சொல்கிறான்.

வெயில், குளிர் போன்ற பாதிப்புகளில் இருந்து மனிதனை ஆடை பாதுகாக்கிறது. அது போல் ஒருவருக்கு வரும் துன்பத்தையும், கஷ்டங்களையும் மற்றவர் சுமந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

மனிதனிடம் உள்ள குறைபாடுகளில் பலவற்றை வெளியே தெரியாமல் ஆடை மறைக்கின்றது. அது போல் மானத்தையும் காக்கின்றது. தம்பதிகளும் ஒருவரின் குறைகளை மற்றவர் மறைத்து தமக்குள்ளே பேசித்தீர்வு காண்பது சிறந்தது என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

அந்தரங்க உறவுகளைப் பற்றி தமக்கிடையே மட்டுமே பேசிக் கொள்ள வேண்டுமே தவிர மற்ற எவரிடமும் சொல்லிக் காட்டக் கூடாது என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

மனிதன் விபரம் தெரிந்த நாள் முதல் நிர்வாணமாகாமல் ஆடையுடன் காணப்படுகிறான். அது போல் தம்பதியரும் ஒருவரை மற்றவர் ஆடை போன்று அவசியமானவர்களாகக் கருத வேண்டும்.

ஆடைகளில் அழுக்கு ஏற்பட்டால் கழுவி தூய்மைப்படுத்துகிறோம். கிழிந்து விட்டால் கூட தைத்து பயன்படுத்துகிறோம். அது போல் ஒருவரிடம் மற்றவர் காணும் குறைபாடுகளைப் பக்குவமாகக் களைந்து இல்லறத்தில் இணைந்திருக்க வேண்டும்.

இன்னும் பல கருத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன. இதை உணர்ந்து தம்பதியர் நடந்து கொண்டால் இல்லறம் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.