468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல்
இவ்வசனங்களில் (7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அவர்களைப் பைத்தியக்காரர் என்று சொன்னதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இது போல் ஏராளமான ஆன்மிகவாதிகள் பைத்தியக்காரர்கள் என்று மக்களால் விமர்சிக்கப்பட்டனர். இந்த விமர்சனத்துக்கு ஆன்மிகவாதிகள் பதில் சொன்னதில்லை. காரணம் பதில் சொன்னால் அவரைச் சோதனைக்கு உட்படுத்தும் அவசியம் ஏற்படும். அப்போது உண்மை தெரிந்து விடும் என்பதால் ஆன்மிகவாதிகள் இந்த விமர்சனத்தைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
பொதுவாக ஆன்மிகவாதிகள் மக்கள் மத்தியில் ஆன்மிகம் என்ற பெயரால் உளறுவார்கள். நம்ப முடியாத பொய்களைச் சொல்வார்கள். அவர்களின் பேச்சுக்களை ஒரு மனோதத்துவ நிபுணர் ஆய்வு செய்தால், அல்லது அவர்களை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தினால் அவர்கள் மனச்சிதைவுக்கு உள்ளாகி இருப்பது தெரிய வரும். எனவே எந்தச் சோதனைக்கும் அவர்கள் உடன்பட மாட்டார்கள்.
கடவுளும், ஆவிகளும் தங்களிடம் பேசுவதாக ஒருவர் கூறுவதே அவர் மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதற்கான சான்றாகவும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.
பெரும்பாலும் இப்படி இருப்பது உண்மை தான்.
கடவுளிடமிருந்து தனக்குச் செய்தி வருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன போது இவர் பொய் சொல்லவில்லை. மனச்சிதைவுக்கு ஆளாகி இப்படிக் கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்தார்கள்.
இப்படி விமர்சிக்கப்படும் போது மற்றவர்கள் சோதனைக்கு உடன்படாமல் ஓடி ஒளிந்து கொண்டதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடி ஒளியவில்லை.
மாறாக என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இவ்வாறு அறைகூவல் விடுமாறு 34:46 வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஒருவர் ஒருவராகவோ, இருவர் இருவராகவோ வாருங்கள்! என்னிடம் கேள்விகள் கேட்டு எனக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அனைவரின் சோதனைக்கும் உடன்படுகிறேன். அந்தச் சோதனையில் எனக்கு எந்த மனச்சிதைவும் இல்லை என்று என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறைகூவல் விட்டார்கள்.
ஒருவர் ஒருவராக வந்தவர்களும், இருவர் இருவராக வந்தவர்களும் இஸ்லாமை ஏற்றார்கள். இந்த மனிதரை நாம் சோதிக்கப் போனால் நாமும் அவர் மார்க்கத்தில் சேர வேண்டிய நிலை வரும் என்று மற்றவர்கள் தவிர்த்து விட்டனர்.
உலகில் இப்படி தன்னைச் சோதனைக்கு உட்படுத்த முன்வந்த ஒரே ஆன்மிகவாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே. இதுவே அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான மாபெரும் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று சொன்ன போது தமக்கு எதிராக எழுப்பப்பட்ட எல்லா விமர்சனங்களையும் எப்படி முறியடித்தார்கள் என்பதை மேலும் அறிய 212வது குறிப்பைக் காண்க!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு, அதனால் அவர்கள் மனநோயாளிகளாக ஆனார்கள் என்று கூறுவோருக்கு இவ்வசனங்கள் மரண அடியாக அமைந்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தவிதமான பைத்தியமும் இல்லை என்ற வாசகம் அவர்கள் சிறிதளவு கூட மனநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டு மன நோய்க்கு ஆளானார்களா என்பது குறித்து அறிய 28, 285, 357, 468, 495, 499 ஆகிய குறிப்புக்களைப் பார்க்கவும்.