480. சபித்து குனூத் ஓதுவதற்குத் தடையா?
இவ்வசனம் (3:128) அருளப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன.
உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டனர். நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது இவ்வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(பார்க்க : முஸ்லிம் 3667)
இவ்வசனம் அருளப்படுவதற்கான காரணமாக முஸ்லிம் நூலில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் புகாரீயில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து’ என்று சொல்லி விட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும், இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், ‘(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்’ என்ற (3:128) வசனத்தை அருளினான்.
(பார்க்க : புகாரீ 7346)
இவ்வசனம் அருளப்பட்டது குறித்து மேற்கண்டவாறு இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த வசனம் அருளப்பட்டது என்று சிலர் விளக்கம் அளித்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். ஏனெனில் பல தடவை அருளப்பட்ட ஒரே வாசகம் கொண்ட வசனங்கள் பல தடவை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.
எனவே மேற்கண்ட இரண்டு காரணங்களில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.
நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.
அல்லது உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம்மைக் காயப்படுத்தியவர்களைச் சபித்த போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.
இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.
திருக்குர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களைக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதைக் கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்புமீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல் தான். இதற்கு திருக்குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.
என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே! என்று நூஹ் கூறினார் என்று 71:26 வசனம் கூறுகிறது.
இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : புகாரீ 1496)
எனவே பாதிக்கப்பட்டவர்கள், அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இதில் இருந்து விளங்க முடிகின்றது. பலவீனமான மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் படைத்தவனிடம் முறையிடுவது மட்டும் தான்.
திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில், திருக்குர்ஆனை மனனம் செய்த எழுபதுக்கும் மேற்பட்டவர்களை நயவஞ்சகர்கள் படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
“அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்த அம்சமும் இந்தச் சம்பவத்தில் இல்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலைநிறுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க முடியாது.
மாறாக உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன. உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.
இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றிபெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அந்தத் தூதருக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் “எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?” என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அல்லாஹ் கண்டிக்கிறான்.
உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட உமக்கு உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான்.
மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
புகாரீயில் பதிவு செய்யப்பட்ட காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட காரணம் தான் ஏற்கத்தக்கதாக உள்ளது.