483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா?
இவ்வசனத்தில் (29:14) நூஹ் நபி 950 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நம் காலத்தில் அறுபது, எழுபது ஆண்டுகளே சராசரியாக மனிதர்கள் வாழ்கின்றனர். இதைப் பார்க்கும் போது 950 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்தது சாத்தியமற்றதாகத் தோன்றலாம்.
நூஹ் நபி 950 ஆண்டுகள் வாழ்ந்தது போல் அவர்களது சமுதாயத்தினரும் அதிக காலம் வாழ்ந்துள்ளனர். அவர்களிடையே 950 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுவதால் அந்தக் காலத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்துள்ளார்கள் என்று அறியலாம்.
இப்போது மனிதர்களின் அதிகபட்ச உயரம் ஆறு அடி என்ற அளவில் இருக்கிறது. ஆனால் முன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக் கூடுகளும், படிமங்களும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் தற்போதைய மனிதனின் பருமன், உயரம் ஆகியவற்றை விட அதிகமாக உள்ளன. இப்போது வாழும் மனிதனின் அளவில் முந்தைய சமுதாயம் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
இது போல் தான் முந்தைய சமுதாயத்தின் வாழ்நாள் இப்போது உள்ளதை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்பது விஞ்ஞானத்துக்கு எதிரானது அல்ல. எந்த விஞ்ஞானமும் ஆரம்பம் முதலே மனிதனின் ஆயுள் காலம் சராசரியாக 60 ஆண்டுகள் தான் என்று கூறவில்லை.
இப்போதைய மனிதன் சராசரியாக 50 ஆண்டுகள் வாழ்கிறான். ஆனால் நம்முடைய முப்பாட்டன்மார்களின் சராசரி வயது 90 என்ற அளவில் இருந்தது. நூறு ஆண்டுகளுக்குள் இப்படி வித்தியாசம் இருக்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதை விடப் பன்மடங்கு வித்தியாசம் இருந்திருப்பதை எந்த விஞ்ஞானத்தாலும் மறுக்க முடியாது.