487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?
இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது கடுமையான குற்றம் என்று இவ்வசனங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு இக்கொடிய வழக்கத்தை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது.
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதன் நேரடிப் பொருள் இது தான்.
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவை அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.
இப்போது நவீன காலத்தில் கருவில் வைத்தே குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
கருவில் வைத்து அழிப்பது குழந்தைக் கொலையில் அடங்குமா? இது பற்றி இஸ்லாமின் நிலை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலை இயக்குவதற்கான உயிர் ஒரு வகை. உணர்வுகளை இயக்குவதற்கான உயிர் இன்னொரு வகை.
எப்போது கரு உருவாகிவிடுகிறதோ அப்போது முதல் அது வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. முதல் நாள் கருவுக்கும் உயிர் உள்ளது. ஒன்பது மாதம் வளர்ச்சி அடைந்த கருவுக்கும் உயிர் உண்டு. கருவில் உருவாகும் குழந்தைக்கு உயிர் இருப்பதால் தான் அது வளர்கிறது; பல்வேறு நிலைகளை அடைகிறது.
இந்த வகையில் பார்த்தால் ஒரு நாள் கருவாக இருக்கும் போது அழிப்பதும் கொலையில் சேரும் என்று தெரிகிறது.
ஆனால் 120வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3208, 3332, 6594, 7454)
அதாவது 120 நாட்களுக்கு முன்னர் கருவுக்கு உயிர் இருந்திருக்கும் போது 120 வது நாளில் உயிர் ஊதப்படுகிறது என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இது மற்றொரு வகையான உயிர் என்று தெரிகிறது.
120 நாட்களுக்கு முன்னர் வரை, வளர்ச்சி அடைவதற்கான உயிர் தான் அக்கருவுக்கு இருந்துள்ளது என்றும், 120 வது நாளில் தான் மனிதன் என்பதற்கான உயிர் ஊதப்படுகிறது என்றும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
(இரு வகையான உயிர்கள் உள்ளன என்பதைக் கூடுதல் ஆதாரங்களுடன் அறிந்து கொள்ள 486 வது குறிப்பை வாசிக்கவும்.)
120வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்றால் அதற்கு முன் அது மனிதக் கருவாக இருக்கவில்லை என்று தெரிகிறது. 120 நாட்களுக்கு முன்னர் உள்ள கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றமாக ஆகாது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது விந்தில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்களைக் குழந்தையாக உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இது குழந்தையைக் கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் கருவைக் கலைப்பது குழந்தையைக் கொன்றதாக ஆகாது.
120 நாள் வளர்ச்சி அடைந்த கருவை அழித்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றத்தில் சேரும். அதற்கு முன் உள்ள நிலையில் கருவை அழித்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றத்தில் சேராது.
ஆனாலும் கருவைச் சுமந்துள்ள பெண்ணுக்கு அது கேடு தரும் என்பதால் அந்தக் குற்றத்தில் சேரும்.
தமக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல. தாயின் உடல் நலனுக்குக் கேடு என்பதால் அது கூடாது.
உயிருக்கு ஆபத்து, அல்லது தாயின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.
இது குறித்து மேலும் அறிய 296, 314, 486 ஆகிய குறிப்புகளையும் காண்க!