490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்?

இவ்வசனங்களில் (4:48, 4:116, 4:137, 4:169, 47:34, 63:6) சிலருக்கு மன்னிப்பே இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன்னை அளவற்ற அருளாளன் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்னொரு பக்கம் சிலரை மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான். இது அளவற்ற அருளாளன் என்பதற்கு எதிராக உள்ளதே என்று இஸ்லாமில் குறை காணப் புகுந்தவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அளவற்ற அருளாளன் என்பதன் பொருளை இவர்கள் அறியாததால் இப்படிக் கேட்கிறார்கள். அளவற்ற அருளாளன் என்ற பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் கடுமையாகத் தண்டிப்பவன் என்ற பண்பும் அல்லாஹ்வுக்கு உண்டு.

அளவற்ற அருளாளன் என்றால் யாருக்கு அவன் அருள் புரிய நாடுகிறானோ அவனுக்கு அளவில்லாமல் அருள் புரிவான் என்பது தான் பொருள்.

கடுமையாகத் தண்டிப்பவன் என்றால் யாரை அவன் தண்டிக்க விரும்புகிறானோ அவனைக் கடுமையாகத் தண்டிப்பவன் என்பது பொருளாகும்.

கடுமையாகத் தண்டிப்பவன் என்ற பண்பு உள்ளதால் நல்லவர்களைப் பிடித்து தண்டிப்பவன் என்று யாரும் கருத மாட்டார்கள்.

அது போல் தான் அளவற்ற அருளாளன் என்றால் யாருக்கு அதற்கான தகுதி இல்லையோ அவர்களுக்கும் அருள் புரிவான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் அளவற்ற அருளாளன் என்றால் அதற்கான இலக்கணப்படி இருந்தால் தான் அது அளவற்ற அருள் எனப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் அது கையாலாகாத்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் ஆகும். அளவற்ற அருளாக ஆகாது.

உதாரணமாக சில தந்தைமார்கள் பிள்ளைகளிடம் அளவற்ற அன்பு வைத்துள்ளார்கள் என்று நாம் சொல்வோம்.

அவர் தன் மக்களில் எவரையும், எந்தக் குற்றத்திற்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்த வகையிலும் தண்டித்ததே இல்லை என்றால், இனியும் தண்டிக்கவே மாட்டார் என்றால் அவரை இரக்கம் உடையவர் என்று எவரும் கூற மாட்டார்கள். ஏமாளி என்றும், இளித்தவாயன் என்றும், கையாலாகாதவன் என்றும் அவர் குறிப்பிடப்படுவார்.

இறைவனின் அருட்கொடைகளையும், பாக்கியங்களையும் ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டு அதற்கான நன்றியை இறைவனின் அடிமைகளுக்குச் செலுத்துவோரையும், அல்லாஹ் அளித்த பொருளையும், உறுப்புகளையும், அறிவையும், ஆற்றலையும் அல்லாஹ் விரும்பும் வழிகளில் பயன்படுத்த மறுப்போரையும் சில நாட்கள் விட்டு விடலாம். சில மாதங்கள் விட்டு விடலாம். சில ஆண்டுகள் விட்டு விடலாம். எப்போதும் விட்டுவிட்டால் அது கையாலாகாத்தனமாகவே ஆகும்.

அல்லாஹ்வை ஏற்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளைச் செயல்படுத்தி வாழ்ந்தவர்கள் ”நாமும் இவர்களைப் போல் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்திருக்கலாமே! அதனால் ஒரு நஷ்டமும் ஏற்பட்டிருக்காதே” என்று கருதும் அளவுக்கு அவர்களை எந்த விசாரணையும், தண்டனையுமின்றி, விட்டு வைத்தால் அதற்குப் பெயர் அருளும் அல்ல. அன்பும் அல்ல.