491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?
முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46, 5:47, 5:66, 5:68, 5:110, 7:157, 9:111, 48:29, 57:27, 61:6, 62:5) கூறுகின்றன.
இப்போது புதிய ஏற்பாடு என்றும், பழைய ஏற்பாடு என்றும் கிறித்தவர்களால் சொல்லப்படுபவை தான் அந்த வேதங்கள் என்று கருதக் கூடாது.
புதிய ஏற்பாடு என்பது இஞ்சீலும் அல்ல. பழைய ஏற்பாடு என்பது தவ்ராத்தும் அல்ல.
இது எப்படி என்று நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.
5:46, 57:27, வசனங்களில் ஈஸாவுக்கு இஞ்சீலைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டது தான் இஞ்சீல் என்றால் இப்போது உள்ள புதிய ஏற்பாடு ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் புதிய ஏற்பாடும் அப்படிச் சொல்லவில்லை. கிறித்தவர்களும் அப்படி நம்பவில்லை.
இயேசுவைப் பற்றி மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோர் இயேசுவின் காலத்துக்குப் பிறகு எழுதியவையும், பவுல் எழுதிய சுவிஷேசங்களும் தான் புதிய ஏற்பாடு என்கின்றனர். இது ஒருக்காலும் இஞ்சீலாக இருக்க முடியாது.
“ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்” என பைபிளில் கூறப்பட்டுள்ளது. (மத்தேயு 4:23, 9:35)
இயேசுவிடம் ஒரு வேதம் இருந்ததாகவும் அந்த வேதத்தை இயேசு பிரசங்கித்தார் என்றும் பைபிள் கூறுவதில் இருந்து இப்போதைய பைபிள் இஞ்சீல் அல்ல என்று அறியலாம்.
இயேசுவுக்கு வழங்கப்பட்ட இஞ்சீல் வேதம், நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை கிறித்தவர்களிடம் இருந்து வந்தது. அதில் உள்ள போதனைகள் திருக்குர்ஆனை ஒத்ததாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் இருந்தது. அதனால் தான் அன்று கிறித்தவர்களாக இருந்த அரபுகள் இஸ்லாமை தழுவிக் கொண்டனர். அரபு மண்ணில் இருந்து கிறித்தவம் முற்றாக ஒழிந்து போனது.
பெயரளவுக்கு நாம் இஞ்சீலை வைத்திருக்கிறோம். ஆனால் முஹம்மதோ அந்த வேதத்தில் இறைவனைப் பற்றி சொல்லப்பட்டவைகளை எடுத்துக் காட்டியே நம் மக்களை முஸ்லிம்களாக்கி விட்டார். இதற்குக் காரணம் திருக்குர்ஆனுக்கு ஒத்ததாக இருக்கும் இஞ்சீல் தான் என்று கருதிய கிறித்தவ சபைகள் இஞ்சீலை இல்லாமல் ஆக்கிவிட்டனர்.
அதை ஒழித்தால் தான் இஸ்லாமின் அலையில் கிறித்தவம் இழுத்துச் செல்லப்படாமல் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் இஞ்சீலை எடுத்துக் காட்டியே கிறித்தவர்களைக் கிறித்தவத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி இஞ்சீலை ஒழித்து விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் வரை இஞ்சீல் கிறித்தவ மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை 5:47, 5:66, 5:68 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அதன் பின்னர் தான் இஞ்சீல் ஒழிக்கப்பட்டு இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவைகளை வேதம் என்று கூற ஆரம்பித்தார்கள்.
அது போல் தவ்ராத் என்பது மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தில் மூஸா நபிக்குப் பின் வந்தவர்களின் வரலாறுகள் இருக்க முடியுமா? ஆனால் பழைய ஏற்பாட்டில் மூஸா நபிக்குப் பின்வந்த பலரது வரலாறுகள் உள்ளன. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தாக இருக்க முடியாது.
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் யூதர்களிடம் தவ்ராத்தும், கிறித்தவர்களிடம் இஞ்சீலும் இருந்தன. அதனால் தான் உங்களிடம் உள்ளதைக் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று அம்மக்களிடமே திருக்குர்ஆன் கூறியது. அம்மக்களும் தங்கள் வேதத்தின் கருத்தையே திருக்குர்ஆனும் சொல்வதால் அதை உறுதிப்படுத்திக் கொண்டு இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
தவ்ராத் வேதம் வழக்கத்தில் இருந்தால் அதை வைத்தே முஹம்மத் யூத மதத்தை அழித்து விடுவார் என்று அஞ்சிய யூதர்கள் தவ்ராத்தையும் ஒழித்து விட்டனர்.
உதாரணமாக தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ள சில விஷயங்களை அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டியது. அந்த விஷயங்கள் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் இப்போது இல்லை. ஆனால் அப்போது இருந்துள்ளது.
திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் வசனங்கள் அன்றைக்கு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இல்லாமல் இருந்தால் அப்போதே அன்றைய யூத கிறித்தவர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி திருக்குர்ஆனைப் பொய்யாக்கி இருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னபடி தங்கள் வேதத்தில் இருந்ததால் தான் அவர்களால் இஸ்லாமை ஏற்க முடிந்தது.
இது போன்ற சில வசனங்களை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், திருக்குர்ஆனிலும் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி என்று திருக்குர்ஆன் 9:111 வசனம் கூறுகிறது.
மேற்கண்ட விஷயம் தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இருந்ததாக அன்றைக்கு தவ்ராத்தையும், இஞ்சீலையும் வைத்திருந்த மக்களிடம் திருக்குர்ஆன் பேசியது. அன்று இருந்த தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இப்படி ஒரு செய்தி இல்லாமல் இருந்திருந்தால் அன்றைய யூதர்களும் கிறித்தவர்களும் இஸ்லாமைப் பொய்யாக்கிட இந்த விஷயத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள்.
அன்றைக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீலில் இருந்த இந்த விஷயம் இப்போதையை புதிய ஏற்பாட்டிலும் இல்லை. பழைய ஏற்பாட்டிலும் இல்லை. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தும் அல்ல. புதிய ஏற்பாடு இஞ்சீலும் அல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
இது போல் மற்றொரு செய்தியைப் பாருங்கள்!
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இஞ்சீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
திருக்குர்ஆன் 48:29
முஹம்மது நபி பற்றியும், அவர்களது சமுதாயம் பற்றியும் மேலே சொன்னவாறு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் இவ்வசனங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் இப்படிக் கூறி இருக்க முடியாது.
ஆனால் இப்போதைய புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் இவ்விஷயம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தவ்ராத்தும், இஞ்சீலும் இருந்துள்ளன. இவ்வேதங்களே இஸ்லாமிய வளர்ச்சிக்கு உதவுவதால் இதை அழித்தால் தான் தங்கள் மதங்களைக் காப்பாற்ற முடியும் என்று திருச்சபைகள் அச்சம் கொண்டு முற்றாக அவற்றை ஒழித்து விட்டன என்பதே உண்மை.
இது குறித்து மேலும் விபரம் அறிய 271வது குறிப்பையும் காண்க.