492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

திருக்குர்ஆன் ஜிப்ரீலின் சொல் என்ற கருத்து வரும் வகையில் இவ்வசனம் (81:19) அமைந்துள்ளது.

இது போன்ற கருத்தில் 2:97, 16:102, 19:64, 26:193, 53:5 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

இது போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்ல. ஜிப்ரீலின் வார்த்தையே என்று சிலர் எதிர்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் முதல்வரின் கட்டளைப்படி ஒரு உத்தரவைப் போட்டால் அதை முதல்வரின் உத்தரவு என்றும் சொல்லலாம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையில் அது முதல்வரின் உத்தரவு என்பதை அனைவரும் விளங்கிக் கொள்வார்கள்.

மாவட்ட ஆட்சியருக்காவது முதல்வரைக் கேட்காமல் சில உத்தரவுகளைப் போட முடியும். ஆனால் ஜிப்ரீலுக்கோ, இன்ன பிற வானவர்களுக்கோ சுயமாக எதையும் சொல்ல அதிகாரம் இல்லை என்பதை 7:206, 16:50, 21:19, 21:27, 66:6 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

எனவே ஜிப்ரீலின் கூற்று என்று சொன்னாலும் அது அல்லாஹ்வின் கூற்றுத் தான் என்பதை அறிவுடைய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஜிப்ரீல் வேதத்தைக் கொண்டு வந்தார் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இதை 2:97 வசனம் தெளிவாகவும் சொல்கிறது.

அல்லாஹ்வின் வேதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட விதத்தை இவர்கள் விளங்கிக் கொண்டால் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப மாட்டார்கள்.

ஒவ்வொரு வசனத்தை அருளும் போதும் ஜிப்ரீலை அல்லாஹ் அழைத்து வசனத்தைச் சொல்ல மாட்டான். ஜிப்ரீல் உள்ளிட்ட அனைத்து படைப்புகளையும் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் மட்டுமே இருந்த போது இனி என்னென்ன நடக்குமோ அவை அனைத்தையும் ஒரு ஏட்டில் பதிவு செய்து விட்டான். அதன்படியே இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது.

அந்தப் பதிவேட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவார்கள் என்பதும், அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்படும் என்பதும், திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

291, 157 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்

6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:38,39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 34:3, 35:11, 43:4, 50:4, 56:77,78, 57:22, 85:21,22 ஆகிய வசனங்களையும் பார்க்கவும்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும். அப்போது இவ்வசனங்கள் அருளப்படும் என்றும் அல்லாஹ் அந்தப் பதிவேட்டில் எழுதி விட்டான். அந்தப் பதிவேட்டில் உள்ளதை அல்லாஹ் உத்தரவிடும் போது ஜிப்ரீல் கொண்டு வருவார். இதன்படி பார்த்தால் செய்தி அல்லாஹ்வுடையது. குரல் ஜிப்ரீலுடையது. அல்லாஹ்வுடைய குரலில் நபியவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்படவில்லை.

செய்தி அல்லாஹ்வுடையது என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் வேதம் என்றும் சொல்லலாம். அதைத் தன் குரலில் வாசிப்பவர் என்ற அடிப்படையில் ஜிப்ரீலின் கூற்று என்றும் சொல்லலாம்.

இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

ஜிப்ரீலின் சொல் என்று கூறப்படுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.

81:19 வசனம் முதல் இறுதி வரை உள்ள வசனங்களில் அந்தக் காரணம் சொல்லப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் என்ற வானவர் தம்மிடம் வந்து வேதத்தைச் சொல்வதாகக் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னதாக அம்மக்கள் நினைக்கவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பொய்யையும் அம்மக்கள் கண்டதில்லை.

ஷைத்தான் வந்து இவரிடம் உளறியதை நம்பி ஏமாந்து ஜிப்ரீல் கூறினார் என்கிறார் என்று அம்மக்கள் சந்தேகப்பட்டனர்.

கொண்டு வந்தவர் ஜிப்ரீல் தானா என்பது அவர்களின் சந்தேகமாக இருந்ததால் அவர் ஜிப்ரீல் தான் என்று சொல்லும் அவசியம் ஏற்பட்டது.

உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர். அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார். அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர். இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.

81:19 வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்கள் இவை.

ஷைத்தான் கூறியதை நம்பி முஹம்மது ஏமாறவில்லை. அல்லாஹ்வுக்கு நெருக்கமான வலிமை மிக்க ஜிப்ரீல் தான் இதை பதிவேட்டில் இருந்து கொண்டு வருகிறார் என்று பதில் சொல்லும் அவசியம் ஏற்பட்டதால் தான் ஜிப்ரீலின் சொல் என்று கூறப்படுகிறது.