493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 3:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது.

இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது நபியை விட இயேசு சிறந்தவர் என்று சில கிறித்தவர்கள், முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

திருக்குர்ஆனே இயேசுவை உயர்த்திச் சொல்கிறது என்று வாதிடும் கிறித்தவர்கள் திருக்குர்ஆன் இறை வேதம் என்று நம்பி இப்படிக் கேட்பதில்லை. விதண்டாவாதமாகவே இவ்வாறு கேட்கின்றனர்.

திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது என்றால் திருக்குர்ஆனில் உள்ள அனைத்தையும் அவர்கள் நம்ப வேண்டும். இயேசு இறைவனின் அடிமை தான். மகனல்லர் என்றும், இயேசு கொல்லப்படவுமில்லை; உயிர்த்தெழவும் இல்லை என்றும், ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்றும் திருக்குர்ஆன் கூறுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

திருக்குர்ஆனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையே அவர்களின் இந்த வாதத்துக்குப் பதிலாக அமைந்துள்ளது. திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை என்பது தான் அவர்களின் நம்பிக்கை. முஹம்மது நபியே கற்பனை செய்தார் என்றால் அவர் தன்னைப் பரிசுத்தவானாக, ஒரு பாவமும் செய்யாதவராக சித்தரிக்கும் வசனங்களை உருவாக்க எவ்வளவு நேரமாகும்? இயேசு பாவியாக இருந்தார் என்று ஒரு வசனத்தையும் அவரால் சேர்த்துச் சொல்வது எளிதானது தான்.

ஆனால் திருக்குர்ஆனில் முஹம்மது நபி பாவம் செய்பவர் தான் என்று கூறப்படுகிறது என்றால் இது முஹம்மது நபியின் கூற்று அல்ல என்பது உறுதியாகிறது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றுகளாக இவ்வசனங்கள் உள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும்.

முஹம்மது நபி பாவங்கள் செய்பவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு இயேசு பாவம் செய்பவர் என்பதும் உண்மையாகும். இது தான் கலப்படமில்லாத உண்மையாகும்.

பாவம் என்றால் கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு போன்றவை மட்டும் தான் என்று இவர்கள் விளங்கிக் கொண்டு இப்படி கேட்கிறார்கள். இது போன்ற பாவங்களை முஹம்மது நபியும் செய்ததில்லை. ஈஸா நபியும் செய்ததில்லை.

பாவம் என்பது விரிந்த பொருள் உடையது. இறைவன் பொருந்திக் கொள்ளாத செயல்கள், பேச்சுக்கள் அனைத்துமே பாவங்கள் தான்.

முதல் மனிதர் ஆதம் அவர்கள் பாவம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் நம்புகின்றனர். கிறித்தவர்களும் நம்புகின்றனர். அந்தப் பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது என்று கிறித்தவர்கள் கடுமையான விஷயமாக இதைக் கருதுகிறார்கள்.

ஆதம் செய்தது கொலையோ, கொள்ளையோ, விபச்சாரமோ அல்ல. தடுக்கப்பட்ட ஒரு மரத்தைச் சுவைத்தது தான். இது போன்ற பாவங்களைத் தான் இறைத்தூதர்களும் செய்வார்கள்.

பைபிள் அடிப்படையில் பார்த்தால் கூட இயேசு பாவம் செய்துள்ளார் என்பது உறுதியாகிறது.

பாவம் செய்த ஆத்மாவே சாகும் என்று பைபிள் (எசக்கியேல் 18;20) கூறுகிறது.

பாவம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் செத்துப் போவார்கள் என்ற பைபிள் கோட்பாட்டின்படி இயேசு மரணித்ததால் அவர் பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது. இஸ்லாமிய நம்பிக்கைப்படியும் இயேசு இனிமேல் மரணிக்க இருக்கிறார் என்பதால் இயேசுவும் மரணிப்பவர் என்று ஆகிறது.

பிசாசு என்று கிறித்தவர்களும், ஷைத்தான் என்று முஸ்லிம்களும் நம்புகின்ற தீய சக்தியின் ஆதிக்கத்தினால் தான் மனிதன் பாவம் செய்கிறான்.

இயேசுவும் பிசாசினால் சோதிக்கப்பட்டார் என்று பைபிள் (மத்தேயு 4:1-10) கூறுகிறது.

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டதில் இருந்து அவர் பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது.

பாவமே செய்யாதவர் என்ற அர்த்தத்தில் ஒருவர் இயேசுவைக் குறிப்பிட்ட போது இயேசு அதை மறுத்துள்ளார்.

அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார். (மாற்கு 10:18)

எந்த மனிதரும் நூறு சதவிகிதம் நல்லவனாக இருக்க முடியாது. நானும் அது போன்றவன் தான் என்று இயேசு கூறியது அவர் பாவம் செய்பவர் என்பதைக் காட்டவில்லையா?

தேவனிடம் நல்லவர் செய்யக் கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் (யோவான் 9:31) போதனை.

ஆனால் இயேசு சிலுவையில் அறையப்படும் போது தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடினார். (மத்தேயு 26:38-45 மாற்கு 14:36, லூக்கா 22:44) ஆனால் அவரது கோரிக்கையை கர்த்தர் ஏற்கவில்லை.

பாவம் செய்யாதவராக இயேசு இருந்திருந்தால் அவரது கோரிக்கை கர்த்தரால் ஏற்கப்பட்டு இருக்கும்.

மதுபானம் அருந்துவது பாவம் என்று பைபிள் (நீதி மொழிகள் 23:29-35) கூறுகிறது. ஆனால் இயேசு மதுபானப் பிரியன் என்றும் அதே பைபிள் (மத்தேயு 11:19) கூறுகிறது.

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது சட்டப்படி கல் எறிந்து கொல்லுமாறு மக்கள் கேட்டனர். அதற்கு இயேசு விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று கூறினார். (யோவான் 8:3-11)

இயேசு பாவம் செய்யாதவராக இருந்தால் அவராவது அவளைத் தண்டித்து இருக்கலாமே?

நியாயப் பிரமாணத்தை மீறுவதும் பாவமாகும். நியாயப் பிரமாணத்தில் விபச்சாரம் செய்தவருக்கு கல்லெறி தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்க அதைச் செயல்படுத்தாமல் இருந்தது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தியதும் மற்றொரு பாவமாகும்.

பாவம் செய்தவர்கள் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது பைபிள் கோட்பாடு. (மத்தேயு 3:6)

எல்லோரும் ஞானஸ்னானம் பெற்றது போல் இயேசுவும் ஞானஸ்னானம் பெற்றார் என்று மத்தேயு 3:13 கூறுகிறது.

மற்றவர்களை ஏசுவதும், கீழ்த்தரமான பேச்சுக்கள் பேசுவதும் கூட பாவம் தான். ஆனால் இயேசுவிடம் சிலர் அற்புதம் செய்யக் கேட்ட போது பொல்லாத விபச்சார சந்ததிகள் என்று திட்டியுள்ளார்.

அற்புதம் செய்யக் கேட்டால் செய்வேன் அல்லது மாட்டேன் என்று சொல்லலாம். கேட்டவர்களை மட்டுமின்றி கேட்டவர்களின் தாய்களும் விபச்சாரிகள் (மத்தேயு 12:39, மாற்கு 16:4) என்று திட்டுவது பாவம் அல்ல என்று கிறித்தவர்கள் சொல்வார்களா?

எனக்கும் போதனை செய்யுங்கள் என்று இயேசுவிடம் ஒரு அன்னிய இனத்துப் பெண் கேட்டார். இஸ்ரவேலர்கள் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றவர்கள் நாய்கள் என்றும் பொருள்படும் வகையில் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுவது அழகல்ல என்று இயேசு சொல்வது (மத்தேயு 15:26, மாற்கு 7:27) பாவம் இல்லையா?

அத்தி மரத்தில் கனிகள் இல்லை என்பதற்காக கோபத்தில் மரத்தைச் சபித்தது பாவம் அல்லவா? பார்க்க : மத்தேயு 21:19

இப்படி பைபிளைப் புரட்டினால் இயேசு நிறையப் பாவங்கள் செய்துள்ளார் என்பது தெரிகிறது. பைபிளை நம்பினால் இயேசு பாவம் செய்தார் என்றும் நம்ப வேண்டும்.

இயேசுவை ஷைத்தான் தீண்டவில்லை என்று இஸ்லாம் கூறுவதை ஒருவர் சான்றாகக் காட்டினால் அதற்கான அர்த்தத்தை இஸ்லாமில் இருந்து பெற வேண்டும். ஷைத்தான் தீண்டவில்லை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளக்கி விட்டார்கள்.

(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 4548

குழந்தை பிறக்கும் போது ஷைத்தானால் தீண்டப்பட்டு குழந்தைகள் அழும். அதில் இருந்து இயேசு பாதுகாக்கப்பட்டார் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. அதன் பிறகு அவர் பாவம் செய்ய மாட்டார் என்று இஸ்லாம் கூறவில்லை. எல்லா மனிதர்களும் பாவம் செய்பவர்கள் என்று இஸ்லாம் தெளிவான அடிப்படைக் கொள்கையை வகுத்திருக்கிறது.

மேலும் விபரத்துக்கு 459வது குறிப்பையும் பார்க்கவும்.