495. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர்.

2:102 வசனத்தின் முழுமையான விளக்கம் குறிப்பு 28ல் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதை வாசித்து உள்வாங்கிக் கொண்டு இதை வாசித்தால் கூடுதல் தெளிவு கிடைக்கும்.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் சொல்கிறதா என்பது மட்டும் இங்கே விளக்கப்படுகிறது.

இவ்வசனம் சொல்வது என்ன? இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்வசனம் சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் வெளியிட்ட மொழி பெயர்ப்புகளைக் காண்போம்.

அப்துல் ஹமீது பாக்கவி மொழி பெயர்ப்பு வருமாறு:

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ நிராகரிப்பவராக இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள் தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் “பாபிலூன்” (என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) “நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத் தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு வருமாறு:

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சொல்லப்படுவது என்ன?

இரு வானவர்கள் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தனர்.

அவ்வாறு கற்றுக் கொடுக்கும் போது சூனியத்தைக் கற்காதே! கற்றால் காஃபிராகி விடுவாய் என்று சொல்லாமல் அவர்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி அவர்கள் எச்சரிக்கை செய்த பின்பும் சூனியத்தைக் கற்க விருப்பம் கொண்டவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சூனியத்தைக் கற்க விரும்பியவர்கள் சூனியத்தின் ஒரு வகையான கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர் என்ற கருத்து வருகிறது.

சூனியத்தினால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பதற்கு இது ஆதாரம் என்கின்றனர்.

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று திருக்குர்ஆனே சொல்வதால் அதை நம்புகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட இரு நிறுவனங்களின் மொழிபெயர்ப்புகளும் இலக்கணப்படி சரியாக இருந்தாலும் இஸ்லாமின்  அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளன.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்ற கருத்து மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில் இருந்து கிடைக்கிறது.

கோள் மூட்டி, பொய் சொல்லி கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று சொன்னால் அது பாவச்செயல் என்றாலும் சாத்தியமானது தான். கணவன் மனைவிக்கு இடையே சூனியத்தின் மூலம் பிரிக்க முடியும் என்று நம்பினால் அது சாத்தியமற்றதாகும். மேலும் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் உள்ளவன் என்று ஆகிறது.

கணவன் மனைவி இருவரையும் மந்திர சக்தி மூலம் பிரிக்கலாம் என்று நம்புவது இணைகற்பித்தலில் சேரும். இந்தக் காரணத்தினால் இம்மொழி பெயர்ப்பு தவறு என்று ஆகிறது.

(சூனியத்தால் ஒன்றும் செய்ய இயலாது; அது ஒரு பித்தலாட்டம் என்பதை 357வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)

10:77 வசனம் சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பது சூனியக்காரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்தைத் தருகிறது.

7:116 வசனம் சூனியம் என்பது கண்கட்டு வித்தை தான்; மெய்யல்ல என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

7:118 முதல் 7:120 வரை உள்ள வசனங்களில் சூனியமும் தோற்றது; சூனியக்காரர்களும் தோற்றனர் என்று கூறப்படுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனங்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

20:66 வசனத்தில் மிகப்பெரும் சூனியக்காரர்கள் செய்த மிகப் பெரும் சூனியத்தால் கயிறுகளைப் பாம்பு போல் காட்ட முடிந்ததே தவிர பாம்பாக ஆக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முரணாகவும் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.

20:69 வசனத்தில் சூனியம் என்பது தந்திரமும் சூழ்ச்சியும் தான்; மெய்யல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. சூனியத்தின் மூலம் கணவன் மனைவியரைப் பிரிக்க முடியும் என்பது இதற்கு முரணாகவும் அமைந்துள்ளது.

52:13,14,15 வசனங்களில் நிஜம் என்பதற்கு எதிர்ப்பதமாக சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான். சூனியம் என்பது பொய் என அல்லாஹ் சொல்லி இருக்கும் போது சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறுவது இதற்கு எதிராக அமைந்துள்ளது.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்ற கருத்துப்பட அமைந்த இந்த மொழிபெயர்ப்புகள் தவறானவை என்பதற்கு அறிவுப்பூர்வமான காரணங்களும் உள்ளன.

சூனியத்தைக் கற்றுக் கொண்டால் காஃபிராகி விடுவீர்கள் என்று இருவரும் எச்சரிக்கை செய்த பிறகு, நாங்கள் காஃபிர்களாக ஆனாலும் பரவாயில்லை; எங்களுக்கு சூனியத்தைக் கற்றுத் தாருங்கள் எனக் கூறி கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் சூனியத்தை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்று இம்மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன.

சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் மிகச் சிறிய சூனியத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?

சிறியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள். பெரியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள் எனும் போது ஏன் அவர்கள் சிறியதைக் கற்க வேண்டும்?

சூனியம் என்பது சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி ஏராளமான வித்தைகளைச் செய்யத்தக்க கலையாகும். காஃபிர்களாக ஆனால் ஆகிவிட்டுப் போகிறோம் என்று துணிந்தவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் அல்லவா கற்று இருப்பார்கள்?

ஒன்றே ஒன்றை, அதுவும் மிகவும் சிறியதைத் தேர்வு செய்து கற்பார்களா? ஒரு சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. ஆயிரம் சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. இப்படி இருக்க ஏன் அனைத்தையும் கற்காமல், அல்லது பெரிய பெரிய விஷயங்களை அவர்கள் கற்காமல் விட்டார்கள்?

பொருளீட்டுவதற்காகவும், உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் சூனியத்தைக் கற்க முன்வந்திருப்பார்கள். ஒரே ஒரு சூனியத்தைக் கற்றால் குறைவாகவே பொருளீட்ட முடியும். அதிகமான சூனிய வகைகளைக் கற்றுக் கொண்டால் அதிகமாகப் பொருளீட்ட முடியும்.

உலக ஆதாயத்துக்காக காஃபிராவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் தானே கற்று இருப்பார்கள் என்று சிந்திக்கும் போது இம்மொழிபெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.

எனவே திருக்குர்ஆனின் இதர வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும், இஸ்லாமின்  அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையிலும் இவ்வசனத்துக்குப் பொருள் செய்வது தான் சரியானது.

எனவே தான் பின்வருமாறு இவ்வசனத்தை நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர் அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர் என்ற வாக்கியம் சொல்வது என்ன?

இந்த இடத்தில் எனவே என்று நாம் பொருள் செய்த இடம் கவனிக்க வேண்டியதாகும். எனவே என்ற பொருள் தரும் ஃபா என்ற சொல் இங்கு இடம் பெற்றுள்ளது. இதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

இந்த மனிதன் ஏமாற்றுபவன்; எனவே அவனுக்கு நான் கடன் கொடுக்க மாட்டேன் என்ற வாக்கியத்தில் எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவனுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன் ஏமாற்றுபவனாக இருப்பது தான் என்ற கருத்து கிடைக்கும்.

அது போல் தான் இச்சொற்றொடரும் அமைந்துள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதும் இதில் இருந்து விளங்குகிறது. சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை தான் இதற்குக் காரணம் என்றும் விளங்குகிறது.

சூனியத்தைக் கற்றுக் கொள்வதால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டதால் தங்களைக் காஃபிர்களாக ஆக்கிவிடும் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பது எனவே என்ற சொல்லில் இருந்து தெரிகிறது.

காராத்தே கற்றுக் கொண்டால் குருவை வணங்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து கராத்தே கற்றுக் கொடுத்தார்கள். எனவே மக்கள் மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். கராத்தேயினால் ஏற்படும் தீமையைச் சொல்லி எச்சரித்த காரணத்தால் அவர்கள் கராத்தே அல்லாத மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டனர்.

இது போல் தான் மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.

கராத்தேயின் கேடுகளைச் சொன்னார்கள். எனவே கராத்தேயைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். எச்சரிக்கை செய்த பின்னர் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றால் தான் எனவே என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டான் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் நன்றாக புகை பிடித்தான் என்று கூறினால் அது பொருத்தமற்றதாக ஆகும்.

இந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வாசகத்தைக் கவனியுங்கள்.

சூனியத்தால் கேடு ஏற்படும் என இருவரும் எச்சரித்தார்கள். எனவே கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் கலையை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற சொல்லில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலை சூனியத்தில் சேராது. சூனியம் அல்லாத சூனியத்தை விட குறைந்த தீமையுடைய மற்றொன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

ஃப என்ற சொல்லுக்கு எனவே என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம். இது போல் அமைந்த சில வசனங்களை கூடுதல் தகவலுக்காக நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

2:144 வசனத்தில் உமது முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் திருப்தி அடையும் கிப்லாவை நோக்கி உமது முகத்தைத் திருப்புகிறோம் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே எனவே என்ற பொருள் தரும் ஃப என்ற சொல் இடம்பெற்றுள்ளது. கிப்லாவை மாற்றுவதற்குக் காரணம் அதற்கு முன்னால் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது வானத்தை நோக்கி நபியவர்கள் அடிக்கடி முகத்தைத் திருப்பியது தான் காரணம் என்று எனவே என்ற சொல்லை வைத்து அறிந்து கொள்கிறோம்.

36:49,50 வசனங்களிலும் ஃப என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென பெரும் சப்தம் ஏற்பட்டு அவர்கள் அழிவார்கள். எனவே அவர்கள் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்ய இயலாது என்று அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான். அவர்கள் மரண சாசனம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது எதிர்பாராமல் கியாமத் நாள் வருவதால் மரண சாசனம் செய்ய இயலாது என்று இங்கே சொல்லப்படுகிறது.

17:48 வசனத்தில் அவர்கள் உமக்கு எப்படி உதாரணம் கூறுகின்றனர் எனக் கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் வழி கெட்டதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொன்னது தான். அதாவது நபிக்குப் பொருத்தமில்லாத உதாரணங்களை நபிக்குப் பயன்படுத்தியதால் இவர்கள் வழிகெட்டனர்.

18:105 வசனத்தில் அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன. எனவே அவர்களுக்கு நாம் தராசை நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களின் அமல்கள் அழிந்து போனது தான் அவர்களுக்காக தராசை நிறுவாததற்குக் காரணம் என்பது எனவே என்ற சொல்லால் இங்கே உணர்த்தப்படுகிறது.

இது போல் தான் காஃபிர்களாகி விடுவீர்கள் என்று ஷைத்தான்கள் எச்சரிக்கை செய்த காரணத்தால் அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பதும் அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது என்ற வாக்கியத்தையும் தமது தவறான கருத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் நாடினால் தவிர அதன் மூலம் எந்தக் கேடும் செய்ய முடியாது என்று கூறப்படுவதால் சூனியத்தின் மூலம் கேடுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது பலமான ஆதாரமாக அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.

அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.

தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை’ என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

என்பதன் கருத்து என்ன?

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையால் அல்லாஹ் நாடினால் பிறருக்குத் தீங்கு ஏற்படுத்த முடியும் என்றாலும் இதைச் செய்பவருக்கு இதனால் மறுமையில் கேடு தான் உள்ளது. இவர்களுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று இச்சொற்றொடர் எச்சரிக்கின்றது.

ஆக இவ்வசனத்தைக் கவனமுடன் ஆய்வு செய்யும் போது சூனியம் அல்லாத, கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையைத் தான் மக்கள் கற்றுக் கொண்டனர் என்பதும், அதன் மூலம் சில தீங்குகள் ஏற்படலாம் என்பதும் தெரிய வருகின்றது.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இதில் சொல்லப்படவே இல்லை.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது சூனியத்தின் ஒரு வகையாக ஏன் இருக்கக் கூடாது என்று சிலர் கருதினால் அது இரண்டு காரணங்களால் தவறாகும்.

சூனியத்தைப் பற்றி அவ்விருவரும் கடுமையாக எச்சரித்த பின்னர் சூனியத்தின் ஒரு வகையைக் கற்றுக் கொண்டு இருந்தால் எனவே என்று சொல்லப்பட்டு இருக்காது.

மேலும் சூனியத்தைக் கற்பது ஒருவனைக் காஃபிராக ஆக்கிவிடும் என்று இவ்வசனத்தில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது பாவமான காரியம் என்றாலும் அது ஒருவனைக் காஃபிராக ஆக்கும் குற்றம் அல்ல. நாமும் அவ்வாறு கூறவில்லை. சூனியத்தை நம்புவோரும் அவ்வாறு கூறுவதில்லை. அவர்கள் கற்றுக் கொண்ட இந்தக் கலை ஒருவரைக் காஃபிராக ஆக்காது என்றால் அது சூனியத்தின் ஒரு வகையாக இருக்க முடியாது என்பது உறுதியாகும்.

அதாவது அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. சூனியம் அல்லாத முறையில் கணவன் மனைவியை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தான் கற்றுக் கொண்டார்கள். அது கூட நூறு சதவிகிதம் வெற்றி தராது. அல்லாஹ் நாடினாலே தவிர அதன் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்க முடியாது இவ்வசனம் சொல்கிறது.

இவ்வாறு மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் பெரும்பாவம் ஏற்படுவதில்லை. சூனியம் என்பது சூழ்ச்சி, தந்திரம், வெற்றி தராது என்றெல்லாம் சொல்லும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இம்மொழிபெயர்ப்பு முரண்படாது.

மேலும் இதில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசக அமைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

கனவன் மனைவியரிடையே பிரிக்கும் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படவில்லை. எதன் மூலம் பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை என்ற சொல்லமைப்பு சூனியம் அல்லாத வேறு ஒன்று என்பதைத் தான் காட்டுகிறது.

இதே வசனத்துக்கு ரஹ்மத் அறக் கட்டளை செய்த மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட மொழிபெயர்ப்பு

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துக் காட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப்பெற்ற(தாக அவர்களே சொல்லிக்கொண்ட)தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவ்விருவரும் “நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே, (இறையை) நிராகரிக்க வேண்டாம்” என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை (என்றும்), ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக் கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்). அதன் மூலம் அல்லாஹ்வின் உத்தரவின்றி யாருக்கும் அவர்கள் தீங்கிழைக்க இயலாது. அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும் பயன் தராததையுமே கற்கின்றனர். இதைக் கொள்முதல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் கிடையாது என்பதை அவர்கள் உறுதியாகத் தெரிந்தே உள்ளனர். எதற்குப் பதிலாகத் தங்களை அவர்கள் விற்றார்களோ அது மிகவும் தீயது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

இந்த மொழிபெயர்ப்பு முன்னர் நாம் எடுத்துக்காட்டிய மொழிபெயர்ப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.

முன்னர் நாம் சுட்டிக்காட்டிய இரு மொழிபெயர்ப்புகளைப் போல் மொழி பெயர்த்தால் அது இணை கற்பித்தலில் தள்ளிவிடும் என்று அஞ்சி இதை அல்லாஹ்வின் கூற்றாகக் காட்டாத வகையில் மொழிபெயர்த்துள்ளனர்.

ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்)

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியதை கற்றுக் கொண்டார்கள் என்ற சொல் அல்லாஹ்வின் கூற்று அல்ல. மாறாக யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்ற கருத்தைத் தருவதற்காக (என்றும் கூறிவந்தனர்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளனர். யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்பதை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான் என்ற கருத்தைத் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்துள் ளனர்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று யூதர்கள் கூறினார்கள் என்று அர்த்தம் செய்தால் இது சூனியக் கட்சியினருக்கு ஆதாரமாகாது. யூதர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப இப்படிச் சொன்னார்கள் என்ற செய்தியைத் தவிர வேறு ஒரு கருத்தும் இதில் இல்லை.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அல்லாஹ் எப்படிச் சொல்வான் என்றும், அப்படிச் சொன்னால் அது பல வசனங்களுக்கு முரணாகி விடும் என்றும் அஞ்சி மேற்கண்ட சொல் யூதர்களின் சொல் என்ற கருத்தைத் தரும் வகையில் ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவன அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அர்த்தம் வராத வகையிலும், திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும் இப்படி மொழி பெயர்த்தால் அதில் நமக்கு மறுப்பு ஏதும் இல்லை.

சூனியம் குறித்து மேலும் அறிய 28, 285, 357, 468, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.