518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்?

ஸக்கூம் எனும் மரத்திலிருந்து நரகவாசிகள் சாப்பிட்டு வயிறை நிரப்புவார்கள் என்று வசனங்களில் 37:62-65 வசனங்களில் கூறப்படுகிறது.

44:43-46, 56:51 வசனங்களில் உருக்கிய செம்பு போல் வயிற்றில் கொதிக்கும் உணவு என்று அதன் தன்மை விளக்கப்பட்டுள்ளது.

நெருப்பில் எந்த மரமும் வளராது என்றாலும் நெருப்பின் அடித்தளத்திலிருந்தும் மரத்தை அல்லாஹ்வால் உருவாக்க முடியும்.

ஸக்கூம் எனும் மரத்தை உருவாக்கி அதை நரகவாசிகளுக்கு அல்லாஹ் உணவாகத் தருவான்; கடும் தண்டனையாக சொல்லிக் காட்டும் அளவுக்கு அது மோசமான உணவு என்று புரிந்து கொண்டால் போதுமானது.

அந்த மரத்தைப் பற்றிக் கூறும் போது அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகள் போல் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஷைத்தான்களின் தலைகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாத போது ஷைத்தான்களின் தலைகள் போல் என்று கூறுவதன் பொருள் என்ன?

ஷைத்தானையோ, அவன் தலையையோ நாம் யாருமே பார்க்கவில்லையே என்ற கேள்வி இங்கு எழலாம்.

இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்திருந்து மனிதர்களைக் கெடுக்கும் கண்ணுக்குத் தெரியாத படைப்பை ஷைத்தான் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆனால் ஷைத்தான் என்று கூறப்படும் அனைத்து இடங்களிலும் இதே கருத்தைக் கொள்ளக் கூடாது.

கெட்ட மனிதர்களைக் கூட ஷைத்தான் என்ற சொல்லால் குர்ஆனும் ஹதீஸ்களும் குறிப்பிடுகின்றன.

(பார்க்க : 5 வது குறிப்பு )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் ஷைத்தான் குறித்த விளக்கம் கொடுக்கப்படுவதற்கு முன்னரும் ஷைத்தான் என்ற சொல்லை அறியாமைக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

கொடூரமான வடிவத்தில் இருந்து கொண்டு மனிதர்களுக்குத் தீங்கு தரும் கெட்ட சக்தி என்ற கருத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தனர்.

பூதம், பூச்சாண்டி போன்ற சொற்களை தமிழுலகில் பயன்படுத்துவதும் இது போன்றது தான்.

அந்த ஷைத்தான்களின் தலைகள் கோரமாக இருக்கும் என்று நம்பி வந்தனர். அவர்கள் நம்பிய அடிப்படையில் தான் ஷைத்தானின் தலை என்று சொல்லப்பட்டிருக்க முடியும்.

ஷைத்தானின் தலை என்று ஒரு சமுதாயத்தை நோக்கி கூறுவதாக இருந்தால் ஷைத்தானின் பற்றி அவர்கள் அவ்வாறு கற்பனை செய்திருந்தால் மட்டுமே கூற முடியும்.