519. மரணத்திற்கு ஆசைப்படலாமா?

இவ்வசனங்களில் (2:94, 62:6) நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் மரணத்திற்கு ஆசைப்படுங்கள் என்று யூதர்களை நோக்கி கேட்கப்படுகின்றது.

இதைச் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிமல்லாத சிலர் அப்படியானால் முஸ்லிம்களாகிய நீங்கள் சாவதற்கு ஆசைப்படுகிறீர்களா என்று எதிர்க் கேள்வியை முன்வைக்கிறார்கள்.

மரணத்தை அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி இருக்கும் போது அதற்கு மாற்றமாக இது அமைந்துள்ள்தே என்று முஸ்லிம்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம்.

சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது என்பது தான் இஸ்லாமின்  போதனை.

இதற்குக் காரணம் மறுமையில் நாம் சொர்க்கம் தான் செல்வோம் என்று யாராலும் அறிய முடியாது. கூற முடியாது. எனவே தான் இன்னும் அதிகம் வாழ்ந்து அதிகம் அமல் செய்து தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காகவே இப்படி இஸ்லாம் வழிகாட்டுகிறது.

ஆனால் யூதர்களின் நம்பிக்கை இப்படி இருக்கவில்லை. யூதர்களாகிய நாங்கள் அல்லாஹ்வின் செல்லப் பிள்ளைகள்; நாங்கள் சொர்க்கம் செல்வது உறுதி என்று இறுமாப்புடன் கூறி வந்தனர்.

சொர்க்கம் உறுதி என்பது உங்கள் நம்பிக்கை என்றால் அற்பமான இந்த உலக இன்பத்தைத் துறந்து இதை விட பல கோடி மடங்கு மேலான சொர்க்கத்தை உடனே அடைய ஆசைப்படுவது தான் சிறந்தது என்று இடித்துரைக்கவே இவ்வாறு கூறப்படுகிறது.

எந்த மனிதனுக்காவது சொர்க்கம் உனக்கு உறுதி எனறு அல்லாஹ் அறிவித்து விட்டால் அப்போது அவன் மரணத்துக்கு ஆசைப்பட்டே தீருவான். ஆனால் யாருக்கும் இதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை.

எனவே முஸ்லிம்களிடம் கேட்கும் இந்த எதிர்க் கேள்வி தவறாகும்.