520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதற்கு துணையாக 4:69 வசனத்தையும் ஆக்கிக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள் என்று இவ்வசனம் விளக்கிவிட்டதால் இமாம்கள் பெரியார்களைப் பின்பற்றுவதற்கு இது ஆதாரம் என்றும் வாதிடுகின்றனர்.

இவ்வாறு வாதிட இவ்வசனங்கள் இடம் தரவில்லை.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். திருக்குர்ஆன் 4:69

நபிமார்கள் உண்மையாளர்கள் உயிர்தியாகிகள் ஆகியோர் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் என்பதை மட்டும் 4:69 வசனம் சொல்லவில்லை. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டால் அந்த நல்லோருடன் நாம் இருக்கலாம் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவது தான் நல்லோர்கள் சென்ற வழி என்று மத்ஹபுக்கு எதிரான கருத்தை இவ்வசனம் அழுத்தமாகச் சொல்கிறது.

இது குறித்து இன்னும் தெளிவு பெற 515 வது குறிப்பையும் காண்க!

அல்ஹம்து அத்தியாயத்தில் உள்ள இந்தப் பிரார்த்தனையை நாம் மட்டும் செய்வதில்லை. முதன் முதலில் இதைச் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இறைவா! எனக்கு சஹாபாக்கள் வழியையும் இமாம்களின் வழியையும் காட்டு என்ற அர்த்தத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றினார்கள் என்ற நச்சுக்கருத்து இந்த வாதத்தில் அடங்கியுள்ளது.

சஹாபாக்களும் கூட இதே பிரார்த்தனையைச் செய்தார்களே! அதன் பொருள் என்ன? சஹாபாக்கள் நான்கு இமாம்களைப் பின்பற்றினார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இவ்வசனம் இறைவனால் அருளப்பட்டது போல் கருதுபவர்களால் தான் இப்படி வாதிட முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏராளமான நபிமார்கள், நல்லவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நேர்வழியில் சென்றதால் இறைவனின் அருளையும் பெற்றனர். அவர்கள் எந்த வழியில் சென்றனர் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. எனவே தான் “இறைவா! இதற்கு முன்னர் நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியைக் காட்டு என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அந்த நேர்வழி எது? என்பதையும் காட்டி விட்டான். இதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.

எனவே குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டதையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.