71. நடுத் தொழுகையா? சிறந்த தொழுகையா?
இவ்வசனத்தில் (2:238) உஸ்தா எனும் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது.
உஸ்தா எனும் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396)
உஸ்தா எனும் சொல்லுக்கு பல அறிஞர்கள் சிறந்த தொழுகை என்று விளக்கம் தருகிறார்கள்.
மிகச் சில அறிஞர்கள் நடுத்தொழுகை என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு நாளின் முதல் தொழுகை சுபுஹ் ஆக இருந்தால் தான் அஸர் நடுத்தொழுகையாக ஆகும். எனவே ஒரு நாளின் துவக்கம் சுபுஹ் தான் மக்ரிப் அல்ல என்ற கருத்துடையவர்கள் இந்த விளக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
வஸத என்ற சொல்லும் அதில் இருந்து பிறந்த சொற்களும் நடு என்ற கருத்தைத் தாங்கி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை,
ஆனால் இங்கே நடு என்ற சொல் பயன்படுத்தப்படாமல் மிக நடுவு என்ற பொருளைத் தரும் இஸ்முத் தஃப்லீல் – கம்பேரிட்டிவ் டிகிரி – எனும் சொல்லமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்முத் தஃப்லீல் என்றால் அதை விட அவனை விட என்ற கூடுதல் அர்த்தம் தரும் சொல்லமைப்பாகும்.
இப்ராஹீமை விட இஸ்மாயீல் நல்லவன் என்று கூறினால் இருவரும் நல்லவர்கள் என்ற கருத்துடன் ஒருவன் கூடுதல் நல்லவனாக இருக்கிறான் என்ற கருத்து வரும்.
மற்ற மாணவர்களை விட மூஸா திறமை மிக்கவன் என்று சொன்னால் எல்லோரும் திறமைசாலிகளாக உள்ளனர். ஆயினும் மூஸா மற்றவர்களை விட கூடுதல் திறமை உள்ளவனாக இருக்கிறான் என்ற கருத்தை தரும்.
ஒரு தன்மை ஒருவனிடம் கூடுதலாகவும் இன்னொருவனிடம் கொஞ்சம் குறைவாக இருக்கும் போது தான் கம்பேர் செய்து ஒப்பிட்டுக்காட்ட முடியும்.
ஆனால் நடுவு என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும். அதைவிட நடுவு, இதை விட நடுவு என்று ஒப்பிட்டு பேச முடியாது. இது கொஞ்சம் கூடுதல் நடுவு இது கொஞ்சம் குறைவான நடுவு என்று சொல்ல முடியாது.
நடுவு என்பது கூடுதல் குறைவை ஏற்காத சொல்லாகும். நடு என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும். இரு பக்கமும் சமமான இடைவெளி இருந்தால் அதை நடுவு என்று சொல்வோம்.
உதாரணமாக அக்பர், அவ்ஸத் போன்ற அமைப்பில் உள்ளவை ஆண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும். குப்ரா உஸ்தா போன்ற அமைப்பில் உள்ளவை பெண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும்.
அக்பர் என்றால் மிகப் பெரியவன் என்று பொருள் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில் பெரியவர்கள் என்ற நிலையில் பலர் உள்ளனர். அனைவரையும் விட பெரியவன் என்ற கருத்தில் இச்சொல்லை ஒருவருக்குப் பயன்படுத்த முடியும்.
ஆனால் அவ்ஸத், உஸ்தா என்ற சொல்லமைப்பு இஸ்முத் தஃப்லீல் வடிவில் இருந்தாலும் மிக நடுவு என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகிவிடும். ஏனெனில் நடு என்று சொல்வதாக இருந்தால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். மிக நடுவு குறைந்த நடுவு என்று சொன்னால் நடுவு என்பதே பொருளற்றதாகி விடும்.
தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நடுத்தொழுகை என்பதை நடுவு என்ற பொருளில் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் தொழுகைகளையும் மிக நடுத் தொழுகையையும் என்ற பொருள் தரும் வகையில் இஸ்முத் தஃப்லீல் ஆக குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அதிக நடுவில் உள்ள தொழுகை என்று தான் மொழி பெயர்க்க வேண்டிவரும். நடுவு என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பதற்கு முரணாக இது அமைந்து விடும்.
ஒரு பொருளைப் பற்றி இரண்டாவது என்று சொல்லலாம். மிக இரண்டாவது என்று சொல்ல முடியாது. மூன்றாவது நான்காவது போன்ற எல்லாச் சொற்களையும் மிக மூன்றாவது மிக நான்காவது என்று பயன்படுத்த முடியாது. அதுபோல் தான் நடுவு என்பதும். அதில் மிக என்ற கருத்தைத் தரும் இஸ்முத் தஃப்லீல் வராது. அப்படி வரும் சொற்களுக்கு சிறந்த என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதனால் தான் நாம் நடுத்தொழுகை என்று மொழி பெயர்க்காமல் மிகச் சிறந்த தொழுகையையும் என்று மொழி பெயர்த்துள்ளோம்.