73. கடனைத் தள்ளுபடி செய்தல்
வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு கூச்சமில்லாமல் வட்டி வாங்குகின்றனர்.
அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் தர்மம் தான் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் கடன் கொடுக்கும் விஷயத்தில் அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்துகிறான். நாம் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது என்ற நிலை ஏற்படும் போது அந்தக் கடனைத் தள்ளுபடி செய்தால் அது தர்மமாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என இவ்வசனம் கூறுகிறது.
கடன் கொடுக்கும் போது தர்மம் என்ற எண்ணம் நமக்கு இல்லாவிட்டாலும் கடன்பட்டவர்களுக்கு கருணை காட்டுவதற்காக அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்தி அருள் புரிகிறான்.
சிரமப்படுவோர் கடன் கேட்டால் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
கொடுத்த கடன் திரும்ப வராவிட்டால் நட்டமாகிவிடுமே என்ற அச்சம் தான் கடன் கொடுக்கத் தடையாகவுள்ளது.
தர்மம் செய்வதை விட கடன் கொடுப்பதில் மிக அதிகமான நன்மைகள் உண்டு என்ற இஸ்லாத்தின் போதனையை அதிகமான முஸ்லிம்கள் அறியவில்லை.
நூறு ரூபாய் தர்மம் செய்தால் நூறு ரூபாய் தர்மம் செய்த நன்மை தான் கிடைக்கும்.
ஆனால் நூறு ரூபாய் கடன் கொடுத்து விட்டு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தால் அந்தக் கடன் திரும்ப வரும் வரை தினமும் நூறு ரூபாய் தர்மம் செய்த நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
கடன் பெற்றவருக்கு ஒருவர் அவகாசம் கொடுத்தால் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகையைத் தர்மம் செய்த நன்மையைப் பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடன் பெற்றவருக்கு ஒருவர் அவகாசம் கொடுத்தால் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த நன்மையைப் பெறுவார் என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு மடங்குகள் நன்மை என்று முன்பு கூறியதற்கு மாற்றமாக இப்போது இரு மடங்குகள் எனக் கூறுகிறீர்களே என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டுமே சரி தான்; கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குள் கடன் திரும்பக் கிடைத்தால் தினமும் அந்தத் தொகையைத் தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும். கொடுத்த அவகாசம் முடிந்து மேலும் அவகாசம் கொடுத்தால் அப்போது கொடுத்த கடன் தொகையப் போல் இரு மடங்குகள் தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல்கள்: தப்ரானி, பைஹகீ, ஹாகிம்
தர்மம் செய்வதை விட கடன் கொடுப்பதில் அதிக நன்மை உண்டு என்பதை இந்த நபிமொழியில் இருந்து அறியலாம்.
அது போல் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தமக்கு வர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்து தன் மீது கடமையான ஜகாத் தொகையிலிருந்து அதைக் கழித்துக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து (2:280) அறிந்து கொள்ளலாம்.