88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?
ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு தங்க நகையைத் தடை செய்தது மேற்கண்ட வசனத்துக்கு முரணானதல்ல.
இவ்வசனத்தில் தங்க நகைகள் அணிவது பற்றி கூறப்படவே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல்களைத் திரட்டி வைத்துக் கொள்வது பற்றியே இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளிக் குவியல்களைத் திரட்டக் கூடாது என்று ஹதீஸ்களில் கூறப்பட்டால் தான் அது இவ்வசனத்திற்கு முரண் எனக் கூற முடியும்.
மேலும் தங்கம், வெள்ளிக் குவியல்களைத் திரட்டி வைத்துக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும் இவ்வசனம் அமையவில்லை.
தங்கம், வெள்ளிக் குவியல்கள் அழகாக்கப்பட்டுள்ளன என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு வாதத்துக்காக நகைகளையே இது குறிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அழகாக்கப்பட்டுள்ளது என்ற சொல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைத் தராது.
அழகாக்கப்பட்டுள்ளது என்ற சொல் அனுமதிக்கப்பட்டுள்ளதை மட்டும் குறிக்கும் வகையில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்படவில்லை.
மனிதனுக்கு அழகாகத் தோன்றும் நல்லவை, கெட்டவை அனைத்துக்கும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை 6:43, 6:108, 6:122, 6:137, 8:48, 9:37, 10:12, 13:33, 16:63, 27:4, 27:24, 29:38, 35:8, 40:37, 47:14, 48:12 ஆகிய வசனங்களில் காணலாம்.
எனவே ஆண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக ஆகாது.