99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

இவ்வசனங்கள் (2:61, 3:112, 5:14, 5:64, 7:167) யூதர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிகளை அல்லது இழிவைப் பேசுகின்றன.

அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக 3:112 வசனம் கூறுகிறது.

இன்றைக்கு யூதர்கள் செல்வச் செழிப்புடன் உள்ளதால் இவ்வசனம் கூறுவது போல் நிலைமை இல்லையே என்று சிலர் நினைக்கலாம். அதற்கு இவ்வசனத்திலேயே பதில் உள்ளது.

மற்றவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து தம்மைக் காத்துக் கொள்ளும் போது இந்த நிலை அவர்களுக்கு ஏற்படாது என்பது தான் அந்தப் பதில்.

ஹிட்லரால் கொன்று குவிக்கப்படும் வரை யூதர்களுக்கு இழிவு தான் இருந்தது. முஸ்லிம்களாலும், பின்னர் கிறித்தவர்களாலும், பின்னர் நாஜிக்களாலும் ஏராளமான இழிவுகளைச் சுமந்தனர்.

“இயேசு தவறான முறையில் பிறந்தவர்” என்பது இவர்களின் கொள்கை. அந்த இயேசுவை இறை மகன் என்று ஏற்றுள்ள பிரிட்டனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமும், அதன் பின்னர் அமெரிக்காவின் ஒத்துழைப்பு மூலமும் தான் வறுமையற்ற நிலையில் உள்ளனர்.

எனவே இந்தப் பிரகடனம் ஒரு காலத்திலும் பொய்யாகவில்லை.

5:14, 5:64 வசனங்களில் யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையே கியாமத் நாள் வரை பகைமையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதிலும் சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

இன்று யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையும், நல்லுறவும் உள்ளது. இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுகிறதே என்று கேட்கலாம்.

இவ்வசனங்களில் உலகம் அழியும் நாள் வரை அவர்களுக்கிடையே பகைமை நிலவும் என்று கூறப்பட்டாலும் 3:112 வசனத்தில் அவர்கள் பிறருடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையால் இது போன்ற இழிவிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கிடையே பகைமை இல்லாதிருப்பது திருக்குர்ஆனின் அறிவிப்புக்கு எதிரானது என்று கருத முடியாது.