பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ஆம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

எம். ஷபீர், திருவனந்தபுரம்.

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்கக் கூடாது.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது.

நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக் கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்தச் சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்று நாம் கூறுவதன் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன் 55:5

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்று அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்ட கணக்கிற்கு மாற்றமாக நம்பத் தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.