ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா?

தக்பீர் ஸலாம் ஆகியவற்றை மட்டும் தான் இமாம் சப்தமாக சொல்ல வேண்டும். மற்ற அனைத்தையும் இமாமும் பின்பற்றித் தொழுவோரும் சப்தமில்லாமல் தான் ஓத வேண்டும்.

صحيح البخاري

1335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ طَلْحَةَ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، ح حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ قَالَ: «لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ»

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள்.  இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ்

நூல்: புகாரி 1335

ஜனாஸா தொழுகையில் அலஹம்து ஓதுவது நபி வழி என்று மக்கள் அறிவதற்காகவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சப்தமாக ஓதியுள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது. நபிவழியில் சப்தமாக ஒதுதல் இருந்திருந்தால் சப்தமாக ஓதியதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் காரணத்தைச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

سنن النسائي

1987 – أَخْبَرَنَا الْهَيْثَمُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள்  இது நபிவழியும், உண்மையும் ஆகும்  என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்

நூல்: நஸாயீ

அல்ஹம்துவுடன் மற்றொரு சூராவும் ஓதுவது நபிவழி என்பதைத்தான் இங்கே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பின்வரும் ஹதீஸ்களில் சப்தமில்லாமல் ஓதுவது தான் நபிவழி என்று தெளிவாகவும் சொல்லப்பட்டுள்ளது.

سنن النسائي

1989 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ قَالَ: «السُّنَّةُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الْأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً، ثُمَّ يُكَبِّرَ ثَلَاثًا، وَالتَّسْلِيمُ عِنْدَ الْآخِرَةِ»

முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: நஸாயீ