உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கேள்வி :

எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தன. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும், கர்ப்பத்தைக் கலைத்து அறுவை சிகிச்சை செய்து விடுங்கள் எனவும் டாக்டர் கூறுகிறார். மீண்டும் கர்ப்பமானால் உயிருக்கு ஆபத்து எனவும் எச்சரிக்கிறார். இந்த நிலையில் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாமா?

செய்யது அப்துல் காதர்

பதில் :

நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளக் கூடாது. நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும்.

இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற இது நிர்பந்தம் ஏற்படும் போது கர்ப்பத்தைக் கலைக்கலாம்.

நிர்ப்பந்தமான நிலையில் இறை நிராகரிப்புச் சொற்களை மொழிவது கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர.

திருக்குர்ஆன் 16:106

இறை நிராகரிப்பு தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இறை நிராகரிப்பு சொற்களைக் கூற அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி, நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

எனவே உங்கள் மனைவி நிரந்தரமாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது தவறல்ல.

07.04.2011. 23:58 PM