தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியா?

குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

யூசுஃப்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்:

198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَنْكَرُوا ذَلِكَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ أَوْ قَالَ يَحْجِزُهُ عَنْ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ رواه أبو داود

நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள். பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேபித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா

நூல் : அபூதாவூத் (198)

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் சலமா நல்லவர் என்றாலும் அவருடைய மனன சக்தியில் கோளாறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மையின் காரணத்தால் பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவரிடத்தில் பலவீனம் இருப்பதாக புகாரி, அபூஹாதிம், இப்னு ஹிப்பான், ஹாகிம், இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளார்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ஷாஃபி கூறியுள்ளார். முதுமையில் இவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேற்கண்ட செய்தியை இவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலே அறிவித்ததாகவும் ஷுஃபா கூறியதாக பைஹகீ தெரிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் சலமா பலவீனமானவர் என்பதால் இவர் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸை அஹ்மது பின் ஹம்பல் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

எனவே இந்த பலவீனமான செய்தியை வைத்துக் கொண்டு குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது எனக் கூற முடியாது.