ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். இதன் உண்மைத் தன்மை என்ன?

இம்ரான், இலங்கை

பதில்

ஸலபுகள் எனும் வழிகேடர்கள் இது போன்ற செய்திகளைப் பரப்பி மக்களைத் தக்க வைக்க முயல்கிறார்கள்.

குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகவும்,  குர்ஆன் ஹதீஸில் இல்லாதவைகளையும் மார்க்கம் என்றும் சலபுகள் பத்வா கொடுத்து வந்தார்கள். அவர்கள் சொல்வதை அப்பாவிகள் நம்பி வந்தனர். அவர்களின் பத்வாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லை என்பதை வஹீயே மார்க்கம் என்ற நிலைபாட்டில் உள்ளவர்கள் எடுத்துக் கூறி கேள்வி கேட்கச் சொல்கிறார்கள். கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்றவர்கள் ஸலபுகளை திட்டுவோரிடம் கல்வி கற்காதீர்கள் என்ற ஒரு வரியில் தமது மடமையை மறைக்கப் பார்க்கிறார்கள்.

சலபுகளைக் குறை கூறுவோரிடம் கல்வி கற்கக் கூடது என்றால்  முஸ்லிம் இமாமிடமும் கல்வி கற்கக் கூடாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான தாபியீன்களையும், தபவுத் தாபியீன்களையும் பலவீனர் என்றும் பொய்யர் என்றும் நம்பகமற்றவர்கள் என்றும் அவர் குறை கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம் நூலையே வாசிக்கக் கூடாது என்பார்களா?

புகாரி இமாமும் இது போல் பலரை குறை கூறியுள்ளார்கள். அவர்கள் அனைவருமே ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தான். ஸலபுஸ் ஸாலிஹீன்களை இப்படி குறை கூறிய புகாரி நூலையும் வாசிக்கக் கூடாது. அதிலிருந்து கல்வியைக் கற்கக் கூடாது என்று கள்ள ஸலபுகள் சொல்வார்களா?

எந்த ஹதீஸ்கலை அறிஞரிடமும் நாம் கற்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே தனி மனிதர்களான ஸலபுகளைக் குறை கூறியவர்கள் தான். ஸலபுகளை குறை கூறாத ஒரு ஹதீஸ்கலை அறிஞரும் இல்லை.

ஆனால் அவர்களிடம்னிருந்து தான் நாம் கல்வியைக் கற்று வருகிறோம். இல்லாவிட்டால் எல்லா ஹதீஸ் நூல்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் எல்லா ஹதீஸ் அறிஞர்களும் ஆயிரக்கணக்கான ஸலபுகளைக் குறை கூறியவர்கள் தான்.

இதிலிருந்து சலபுகளின் இந்த வாதம் அறிவீனமானது என்பது தெளிவாகிறது.

எந்தக் காரணமும் இல்லாமல் அவதூறாக ஸல்புகளைக் குறை கூறுபவர்கள் பற்றித் தான் முஸ்லிம் இமாம் கூறியிருக்கிறார்.

தற்காலத்த்ல் யாரும் எந்த ஸலபுகள் மீதும் அவதூறு கூறுவதில்லை. மார்க்க ரீதியான அவர்களின் தவறுகளைத் தான் தான் சுட்டிக் காட்டுகிறார்கள். இது வரவேற்கத்தக்கதாகும்.