குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

திருக்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று அறிஞர் இப்னுல் கையூம் சொன்னதை ரமலான் உரையில் பீஜே எடுத்துக் காட்டினார்.

இந்த விஷயத்தில் பீஜே இருட்டடிப்புச் செய்து விட்டார் என்று சலபுகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான்:

இமாம் இப்னுல் கையிமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

பத்வாவை முழுமையாகக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வது பீஜேயின் வழக்கம்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களிடம் அறிவிப்பாளர் வரிசையில் கவனம் செலுத்தாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அறிவதற்கு ஏதாவது அளவு கோல் உண்டா எனக் கேட்கப்படுகின்றது.

அதற்கு இமாம் அவர்கள்:

இது ரொம்ப முக்கியமான விடயம். நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும்.

எனக் கூறி இதற்கான தகமையை நிர்ணயம் செய்கின்றார்கள்.

பிறகு ஒரு செய்தி இட்டுக் கட்டப்பட்டது என்பதை குறித்த தகமை உள்ளவர்கள் அறிந்து சொல்ல முடியுமான சில அளவு கோல்களைக் கூறுகிறார்கள்.

அவைகளில்:

1) புலன் பொய்ப்படுத்தும் செய்தி:

உதாரணமாக: கத்தரிக்காய் ஏந்த நோக்கத்திற்காக சாப்பிட்டாலும் அது நடக்கும்!

பேசும் போது தும்மல் ஏற்பட்டால் அந்தப் பேச்சு உன்மை என்பதற்கான அடையாளம்.!

2) அல்குர்ஆன் கூறும் தெளிவான கருத்துக்கு முரண்பாடான செய்தி

உதாரணமாக: உலகின் ஆயுள் ஏழாயிரம் வருடங்களே என இடம் பெறும் செய்தி.

நமது வாதம் :

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் இங்கு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளுவதற்கான அளவு கோல்களைக் கூறுகிறார்கள். ஆனால் பீஜேயோ ஸஹீஹ் ஹதீஸ்கள் அல்குரானுக்கு முரண்பட்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அதை மறுக்க வேண்டும் என்பது ஹதீஸ் கலை விதியாகும் என்று கூறுகின்றார். இதற்கும் பீஜே கூறுவதற்கும் என்ன சம்மந்தம்? பீஜேயின் கோட்பாடு வேறு இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் கோட்பாடு வேறு அல்லவோ.

சரி, இது உங்களுடைய கொள்கையைத் தான் சொல்கின்றது என்று நீங்கள் விதண்டாவாதம் செய்தால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1) இமாம் இப்ன் கைய்யிம் (ரஹ்) இந்த விதியைக் கையாளும் நபருக்கு குறிப்பிட்ட தன்மை இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள், குறிப்பாக  நபிகளார் காலத்தில் நபித் தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும் இந்த புலமை உங்களிடம் இருக்கின்றதா ?

2) இருக்கின்றது என்றால் உங்களால் இது வரைக்கும் பீஜே மறுத்துள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் உட்பட அதன் இலக்க என்னையும் அது எந்த, எந்த, கித்தாபுகளில் பதிவாகியுள்ளது என்பதையும், புறச்சாதன உதவி இல்லாமல் குறிப்பிட முடியுமா ?

நிச்சயம் உங்களால் இயலாது. ஏன் என்றால் இந்த விதியைப் பயன்படுத்தி, ஹதீஸ்களை இட்டுக் கட்டப்பட்டது என முடிவு செய்த இமாம்களை) இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் உட்டபட) எம்மால் காண முடியாதுள்ளது.

ஆக இந்த விதியை நீங்கள் கையில் எடுக்க ஒரு காலமும் இயலாது, அதை உங்களுடைய கொள்கைக்கு ஆதாரமாகவும் காட்ட இயலவே இயலாது.

இது தான் சலஃபுகள் வைத்த குற்றச்சாட்டு.

இப்னுல் கையிம் என்ற அறிஞரிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கான பதிலையும் வெளியிட்டு பீஜே வைத்த வாதம் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவர்கள் நிரூபித்ததற்கு முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்காமலேயே, அதை ஆய்வு செய்யாமலேயே ஒரு செய்தி இட்டுக்கப்பட்ட செய்தி தான் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் இப்னுல் கையிம் என்ற அறிஞரிடத்தில் வைக்கப்பட்ட கேள்வி.

அதற்கு அவர் பதிலளிக்கும் விதமாகத்தான், குர்ஆனின் தெளிவான கருத்துக்கு முரண்பட்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று தெளிவுபடுத்துகின்றார்.

இதைத்தானே பீஜே குறிப்பிட்டார். இதில் என்ன பீஜே இருட்டடிப்புச் செய்தார் என்பதை அவர்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு கேள்வி கேட்கும் போது விளக்கினாலும் கேள்வி கேட்காமலே விளக்கினாலும் இரண்டும் ஒன்று தான். கேள்வி கேட்ட போது விளக்கியதால் இப்னுல் கையிம் அப்படி சொல்லவில்லை என்று அறிவுடையவர்கள் வாதிட மாட்டார்கள்.

இன்ன இடத்தில் இன்ன நபரை நான் கொலை செய்தேன் என்று அப்துல் காதிர் கூறியதாக பீஜே எடுத்துக் காட்டுகிறார்.

இல்லை; அப்துல் காதர் சொன்ன விஷயத்தில் நீங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டீர்கள். அப்துல் காதர் அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா?

நீ யாரையும் கொலை செய்தாயா? என்று அப்துல் காதிரிடம் சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அப்துல்காதர் இன்ன இடத்தில் இன்ன நபரை கொலை செய்தேன் என்று சொன்னார்.

இதுபோல் தான் சலபுகளின் இந்த வாதம் உள்ளது.

அப்துல் காதிர் கொலை செய்த்தை ஒப்புக் கொண்டார் என்பது தான் இரு செய்திகளிலும் உள்ளது.

அடுத்து அவர்கள் சொல்வது என்ன?

குர்ஆன் வசனத்தோடு முரண்படும் ஹதீஸ்களை அறிந்து கொள்வதற்கு உரிய ஷரத்துகளை இப்னுல் கையிம் சொல்லியுள்ளாராம். அந்தப் பண்புகள் உங்களிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்னுல் கையிம் அவர்கள் குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்று சொல்லிவிட்டு அதை அறிய இரத்தத்தில் பல விஷயங்கள் ஊறி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இரத்தத்தில் எது ஊறியதோ, அல்லது ஊறவில்லையோ அது நமக்குத் தேவையில்லாதது; இங்கு இதை நாம் சொல்ல வந்ததன் நோக்கம் என்ன?

குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்ற கருத்தில் அவர் இருந்தது உண்மையா இல்லையா? இதுதானே இங்கு பீஜே சுட்டிக்காட்டியது. இதில் பீஜே என்ன இருட்டடிப்புச் செய்தார்.

அடுத்தபடியாக இப்னுல் கையிம் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்று பீஜே சொன்னாரா?

ரூஹ் என்ற பெயரில் புத்தகம் எழுதி இப்னுல் கையும் விட்டுள்ள கப்சாக்கள் கொஞ்ச நஞ்சமல்ல; இதையெல்லாம் நாமும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆதாரப்பூர்வமான செய்தியாக பதிவு செய்யப்பட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இதற்கு முன்பு யாரேனும் சொல்லியுள்ளார்களா என்று சலஃபுகள் வைத்த வாதத்திற்குத் தான் பீஜே பதில் அளித்தார்.

இப்னுல் கையிம் எழுதியுள்ள அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் நாம் சொல்ல மாட்டோம்.

இப்னுல் கையிம் இது குறித்து கூறிய தவறான கருத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். மெய்யையும் பொய்யையும் பிரித்தரியும் வசதிகள் குறைவாக உள்ள காலத்தில் இது சாத்தியக் குறைவு என்று நினைத்து அவர் இதை கண்டுபிடிக்க பல ஷரத்துகளை சொல்லி இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை இது சாத்தியமானது. அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்பட்டு நூல் வடிவத்தில் வந்துவிட்ட நிலையிலும், அனைவரது கையிலும் திருக்குர்ஆன் தவழும் நிலையிலும், அனைத்து நூல்களுமே சாஃப்ட்வேர்களாக வந்துவிட்ட நிலையிலும் நவீன புறச்சாதனங்கள் வந்த பின் இது இன்னும் எளிதானதே!.

எனவே தொப்பி போடுவது சுன்னத் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் இப்னுல் கைய்யும் சொன்னதை நாம் எப்படி ஏற்கவில்லையோ, அது போல் ஏற்கத்தகாத அவரது இந்தக் கருத்தையும் நாங்கள் ஏற்கவில்லை.

புறச்சாதனம் இல்லாமல் உங்களால் இதைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வியும் அறியாமையாகும்.

புறச்சாதனம் இல்லாமல் வஹீ மூலம் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று சொல்லியிருந்தால் தான் இந்த அதிமேதாவிகள் கேட்கும் கேள்வி சரியானதாகும். நாம் வஹீ மூலம் இதைக் கண்டுபிடிப்போம் என்றோ, நமக்கு ஞானக்கண் உள்ளது; அதை வைத்து கண்டுபிடிப்போம் என்றோ நாம் சொல்லவில்லை. அப்படி நாங்கள் கூறினால் தான் இவர்கள் இப்படி கேட்க முடியும்.

அனைத்தையும் புறச்சாதனம் வழியாகத் தான் அறிய முடியும். குர்ஆனையும் கூட புறச்சாதனம் (பேப்பர், கம்ப்யூட்டர், செல்ஃபோன் உள்ளிட்ட இன்னபிற புறச் சாதனங்கள் இருந்தால் தான் அறிய முடியும்.