தத்லீஸ் என்றால் என்ன?

பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் ஹதீஸ் கலையில் தத்லீஸ் எனப்படும்.

உதாரணமாக

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹஸன் என்பாரிடம் கூறுகிறார்.

ஹஸன் என்பார் சலீம் என்பாரிடம் கூறுகிறார்.

சலீம் இதை எப்படி அறிவிக்க வேண்டும்? இதை ஹஸன் கூறினார். ஹஸனுக்கு அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தான் அவர் கூற வேண்டும். இப்படிக் கூறினால் அவர் யாரையும் இருட்டடிப்புச் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறாமல்

அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறார் என்று கூறுகிறார் என்றால் இவர் அப்பாஸிடம் தானே கேட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்பாஸ் கூறியதை இவர் செவியுறவில்லை. அப்பாஸ் கூறியதாக ஹஸன் கூறியதைத் தான் செவியுற்றார். தனக்கு கூறிய ஆசிரியரை விட்டு விட்டு அறிவிப்பதால் இது தத்லீஸ் எனப்படும்.

சலீம் என்பார் தனது ஆசிரியரைக் கூறாமல் மறைத்து விட்டதால் அவர் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது. அவர் யார் என்று தெரிந்தால் தான் அவரது நாணயம் நம்பகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்ய முடியும்.

ஆசிரியரைக் கூறாமல் விட்டு விட்ட எல்லா ஹதீஸ்களும் முதல்லஸ் என்ற வகையில் சேராது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய உதாரணத்தில் சலீம் என்பவர் சில செய்திகளை அப்பாஸிடம் நேரடியாக கேட்டு இருக்க வேண்டும். சில செய்திகளை அப்பாஸ் கூறியதாக மற்றவர் சொல்லி கேட்டிருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாக அறிவித்தால் தான் தத்லீஸ் ஆகும்.

சலீம் என்பவர் அப்பாஸ் அவர்களைச் சந்திக்கவே இல்லை. அவர் காலத்தவராகவும் இல்லை. இந்த நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாகச் சொன்னால் இது முன்கதிவு என்ற வகையில் சேரும். சலீம் என்பார் அப்பாஸைச் சந்தித்து இருக்க மாட்டார் என்ற ஆதாரம் உள்ளதால் இவர் அப்பாஸிடம் கேட்டதாகச் சொல்வது தவறு என்ற தெளிவான முடிவுக்கு வந்து விடமுடியும்.

ஆனால் அப்பாஸிடம் இவர் நேரடியாகவும் சில ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். சில ஹதீஸ்களை அப்பாஸ் கூறியதாக மற்றவர்கள் இவருக்கு அறிவித்துள்ளனர். இப்போது இவர் அப்பாஸ் கூறினார் என்றால் இங்கு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் அப்பாஸிடமும் கேட்டுள்ளதால் இதையும் அவர் அப்பாஸிடம் கேட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். இப்படி இருந்தால் தான் முதல்லஸ் எனப்படும்

சலீம் என்ற அறிவிப்பாளர் அப்பாஸ் வழியாக அறிவிக்கும் செய்தியை நான் அப்பாஸிடம் கேட்டேன்; அல்லது அப்பாஸ் எனக்குச் சொன்னார் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் இதில் அவர் இருட்டடிப்பு செய்யவில்லை. நேரடியாகக் கேட்டதாகச் சொல்வதால் இது ஏற்புடைய ஹதீஸ் ஆகும். இப்படிச் சொல்லாமல் அப்பாஸ் சொன்னார் என்று அறிவித்தால் இவரிடம் சொன்னார் என்ற கருத்து இதில் இல்லை. அப்பாஸ் இவரிடம் சொல்லி இருக்கலாம். அல்லது அப்பாஸ் சொன்னதாக மற்றவர் இவருக்குச் சொல்லி இருக்கலாம். இப்படி இருந்தால் அதை ஆதாரமாகக் கொள்ள கூடாது.

இதில் சில அறிவிப்பாளர்கள் விதிவிலக்கு பெறுவார்கள்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

சலீம் என்பவர் அப்பாஸிடம் நேரிலும் கேட்டுள்ளார். அப்பாஸ் கூறியதாக இன்னொருவர் மூலமும் கேள்விப்பட்டுள்ளார். ஆனால் எதை நேரடியாக அப்பாஸிடம் கேட்டாரோ அதை மட்டுமே அப்பாஸ் கூறியதாக அறிவிப்பார். இன்னொருவர் வழியாக கேட்டதை அப்பாஸ் கூறியதாக அறிவிக்கவே மாட்டார் என்பது நிருபணமாக இருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் முதல்லஸ் ஆகாது. நான் நேரடியாகக் கேட்டேன் என்று சொல்லாவிட்டாலும் அது முதல்லஸ் ஆகாது.

முதல்லஸ் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும்.

ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.

இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.