உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் அனுமதி கேட்கப்படுமா?

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?

கேள்வி

? சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா?

எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை

புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது.

صحيح البخاري

4586 – حدثنا محمد بن عبد الله بن حوشب، حدثنا إبراهيم بن سعد، عن أبيه، عن عروة، عن عائشة رضي الله عنها، قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ما من نبي يمرض إلا خير بين الدنيا والآخرة»، وكان في شكواه الذي قبض فيه، أخذته بحة شديدة، فسمعته يقول: {مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين} [النساء: 69] فعلمت أنه خير

நோயுற்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலகவாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4586

பதில்

இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் இதற்கு இரண்டு அர்த்தம் இருக்க முடியும்.

அறவே மரணிக்காத வாழ்க்கை என்பது ஒரு அர்த்தம். இப்படி அர்த்தம் கொடுத்தால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், பல வசனங்களுக்கும் மாற்றமாக அது அமையும்.

ஏனெனில் யாராக இருந்தாலும் அவர் மரணித்தே ஆக வேண்டும். எந்த ஆன்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப் போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.  அல்லாஹ்வின் கட்டளையின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.

திருக்குர்ஆன் 3:144,145

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 21:35

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 29:57

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.  பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.

திருக்குர்ஆன் 39:30,31

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 63:11

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியும். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:88

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்.மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

திருக்குர்ஆன் 55:26,27

அழிவே இல்லாமல் உலகில் வாழும் வாழ்க்கை என்று இதற்கு பொருள் கொள்ள முடியாது. நீண்ட நாள் கொடுக்கப்பட்டாலும் கியாமத் நாளின் போது மரணித்தே ஆக வேண்டும்.

அழிவே இல்லாத வாழ்க்கைக்கு வாய்ப்பளிக்கப்படுதல் யாருக்கும் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

அந்த அர்த்தம் கொள்ளாமல் நீண்ட காலம் வாழ்வது என்று பொருள் கொள்ள முடியும். அப்படி இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீண்ட நாள் வாழ்வதைத் தேர்வு செய்வது தான் அவர்களுக்கு அதிக நன்மை பெற்றுத தரும்.

பல நூறு கோடி மக்களுக்கு நபியாக இருந்து நேர்வழி காட்டும் வாய்ப்பு தான் அதிக நன்மையைப் பெற்றுத் தரும்.

மேலும் இன்றைக்கு நாம் காண்கின்ற குழப்பங்கள் ஏதும் இல்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கொள்கை, ஒரே கோட்பாடு, ஒரே தலைமை என்று வாழும் வாய்ப்பு இதனால் ஏற்படும். சமுதாயம் சிதறி விடாமல் ஒற்றுமை ஏற்படும்.

அவர்கள் பெயரால் சொல்லப்பட்ட பொய்கள் உருவாகி இருக்க முடியாது. அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பொய்யான செய்திகள் உருவாக்கப்பட்டால் அவர்கள் மூலமே அவை களையெடுக்கப்பட்டு விடும். இட்டுக்கப்பட்ட ஹதீஸ்களுக்கும் பலவீனமான ஹதீஸ்களுக்கும் வேலை இல்லாமல் போய் விடும்.

மத்ஹபுகள், தரீக்காக்கள், சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒழிந்து ஒரு மத்ஹப், ஒரு இயக்கம், ஒரு ஆட்சி என்ற நிலை ஏற்படும்.

நவீன பிரச்சனைகளுக்கு நபிகள் நாயகமே நேரடியாக தீர்வு சொல்ல முடியும் என்பதால் குழப்பங்கள் வராது.

உலகம் அழியும் காலம் வரை நபியாக இருந்து மக்களுக்கு வழிகாட்டுதல் நபிகளுக்கும் அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தரும்.

மார்க்கத்துக்கும், மக்களுக்கும் அதிக நன்மை ஏற்படும்.

எனவே இப்படி ஒரு வாய்ப்பு நபிகளுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதைத் தான் தேர்வு செய்திருப்பார்கள்.

எனவே இந்த ஹதீஸ் பொருளற்றதாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சரியானதையும் சிறந்ததையும் தேர்வு செய்யவில்லை என்றும் சொல்கிறது.

எனவே இது ஏற்கத்தகாத ஹதீஸாகும். புகாரியில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் மேற்கண்ட காரணங்களால் நபிகள் சொன்ன செய்தி அல்ல என்று அறியலாம்.

10.01.2015. 20:27 PM