மதம் மாறியவரைக் கொல்ல வேண்டுமா?
இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
صحيح البخاري
3017 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، حَرَّقَ قَوْمًا، فَبَلَغَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ» ، وَلَقَتَلْتُهُمْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3017)
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ளதால் இது சரியான ஹதீஸ் அல்ல.
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் (2:256)
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது.
இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
திருக்குர்ஆன் (18:29)
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
திருக்குர்ஆன் (10:99)
இஸ்லாத்தை ஏற்கும்படி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க நாம் ஒருவரை நிர்பந்தித்தால் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. எனவே இஸ்லாத்தைக் கட்டாயமாக ஒருவனின் மீது திணிப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் இஸ்லாம் அனுமதி தரவில்லை.
எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
திருக்குர்ஆன் (88:21)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் உண்மைக் கொள்கை என்பதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது கடமை. அவர்களை அடக்கி இஸ்லாத்தைப் பின்பற்றச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
நபியவர்களின் உபதேசத்தை ஏற்காமல் ஒருவன் புறக்கணித்தால் அவனை இந்த உலகத்தில் எதுவும் செய்ய இயலாது. மாறாக அவனை விசாரித்து அவனுக்குத் தண்டனை தருகின்ற அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் (108:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் கொள்கையும் இணைவைப்பாளர்களின் கொள்கையும் ஒன்றல்ல. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எனவே நான் உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி என்னை நீங்கள் நிர்பந்திக்காதீர்கள். என் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களை நிர்பந்திக்க மாட்டேன் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் (9:6)
இணைவைப்பாளர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் அடைக்கலத்தை எதிர்பார்த்து வரும் நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தால் தான் அடைக்கலம் கிடைக்கும் என்று நிர்பந்திக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை. இணை வைப்பாளர்களை நிர்பந்திப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்கச் செய்ய வேண்டுமே தவிர இஸ்லாத்தில் இணையும் படி வற்புறுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளை.
மதம் மாறியவர்களைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. இந்த இடங்களில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைப் பொறுத்திப் பார்த்தால் அசாத்தியமான விஷயங்களைக் குர்ஆன் சொல்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டி வரும். எந்த வகையிலும் இவர்கள் கூறும் சட்டத்தை குர்ஆன் வசனங்களுடன் பொறுத்த முடியாது.
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
திருக்குர்ஆன் (4:137)
இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டியவன் என்றால் அவன் கொல்லப்பட்ட பிறகு நான் அவனுக்கு நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமில்லாமல் ஆகிவிடும். பல முறை மதம் மாறினாலும் இஸ்லாமிய அரசாங்கத்தால் அவன் கொல்லப்படாமல் உயிருடன் இருக்கும் போது தான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமாக அமையும். ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது உயிருள்ளவர்களுக்கே சாத்தியம்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் (2:217)
மதம் மாறியவர்களைக் கொல்வது சட்டமாக இருந்திருந்தால் உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக கொல்லப்பட்டவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும் என்று அல்லாஹ் கூறியிருப்பான். பொதுவாக எல்லோரும் எப்படி மரணிக்கிறார்களோ அது போன்ற மரணத்தையே மதம் மாறியவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
மதம் மாறியவர்கள் திருந்துவதற்கு அவர்கள் மரணிக்கும் வரை அல்லாஹ் கால அவகாசம் கொடுக்கிறான். அதற்குள் அவர்கள் திருந்தி விட்டால் அவர்கள் செய்த செயல்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மரணிக்கும் வரை திருந்துவதற்கு அவகாசம் அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கும் போது மதம் மாறியவுடன் அவர்களைக் கொல்லுவது என்பது இறை வாக்கிற்கு எதிரான செயல்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் (3:86)
இந்த வசனத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லவேயில்லை என்று முடிவு செய்து விடலாம். மதம் மாறியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. மதம் மாறியதற்காக கொல்லப்பட்டு விட்டவர்களுக்கு நான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது பொருத்தமாக அமையாது. மாறாக அவர்கள் உயிருடன் இருந்தால் தான் இந்த வாசகத்தைக் கூற முடியும்.
மதம் மாறியவர்களுக்குரிய தண்ட னையைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்களின் சாபமும் அவர்களுக்கு உண்டு என்பதே அவர்களுக்குரிய தண்டனை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இங்கு கூறப்படவில்லை.
மதம் மாறிய பிறகு திருந்தியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைவனுடைய இந்த மன்னிப்பு மனிதன் மரணிக்கும் வரை இருக்கிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்களால் எப்படி திருந்த முடியும்? அல்லாஹ் அவர்களை எப்படி மன்னிப்பான்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன் (16:125)
இந்த வசனத்தில் எவ்வாறு அழைப்புப் பணியைச் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். விவேகம், அழகிய அறிவுரை, அழகான வாதம் இவற்றின் மூலம் அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஒருவரை நிர்பந்தித்து இஸ்லாத்திற்கு இழுத்து வருவது விவேகமாகுமா? அழகிய அறிவுரையாகுமா? அல்லது அழகிய விவாதமாகுமா?
நிர்பந்தம் இருக்கும் மார்க்கத்தில் விவாதம் எதற்கு?
இணை வைப்பாளர்கள் வைத்த வாதங்களை திருக்குர்ஆன் குறிப்பிட்டுக் கூறி அதற்கான பதிலையும் தருகிறது. சிந்தித்துப் பார்த்து இம்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும்படி கூறுகிறது. இஸ்லாமியர்கள் கூட அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கும் போது செவிடர்கள் குருடர்களைப் போன்று அதை ஏற்கக் கூடாது என்று உபதேசம் செய்கிறது.
இஸ்லாம் நிர்பந்தத்தைப் போதிக்கின்ற மார்க்கமாக இருந்தால் கண்மூடித்தனமாக அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சிந்திக்கும்படி ஏன் சொல்கிறது? நிர்பந்தம் உள்ள இடத்தில் சிந்தனைக்கு வேலை இல்லை.
மாற்றார்களிடத்தில் அழகிய முறையில் விவாதம் செய்யும் வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதாலும் மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் இஸ்லாம் என்பது சிந்தித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய மார்க்கம் தான். யாரையும் நிர்பந்தமாக இஸ்லாத்தில் இணையச் சொல்கின்ற மார்க்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்க ளுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்று கூறுங்கள்!
திருக்குர்ஆன் (29:46)
குர்ஆனை வைத்து இணைவைப்பாளர்களிடத்தில் ஜிஹாத் செய்யுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. கொலை மிரட்டல் விடுத்து நிர்பந்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் குர்ஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் தர்க்கம் செய்யுங்கள் என்று கட்டளையிடாது. ஏனென்றால் விவாதம் செய்து அவர்களை இஸ்லாத்திற்குக் கொண்டு வருவதை விட நிர்பந்தம் செய்தால் பயந்து கொண்டு எளிதில் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள். ஆனால் இதை அல்லாஹ்வோ அவனது தூதரோ விரும்பாததால் விவாதம் செய்வதையே கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
திருக்குர்ஆன் (25:52)
குர்ஆன் கூறாத தண்டனை
குர்ஆன் பல இடங்களில் மதம் மாறியவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. விபச்சாரம் அவதூறு திருட்டு போன்ற தவறான செயல்களுக்குத் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் தண்டனைகளைத் தருகிறது. ஆனால் தவறான நம்பிக்கைகளுக்கு மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைக் கூறியே எச்சரிக்கிறது.
இந்த உலகத்தில் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்தத் தண்டனையைக் கூறி மனிதர்களை எச்சரித்திருக்கும். ஆனால் திருட்டு அவதூறு விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு இந்த உலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையைக் கூறிய குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவே இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.
திருக்குர்ஆன் (5:54)
மதம் மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இஸ்லாமிய சட்டமாக இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் கூட இது தான். ஆனால் இந்த இடத்தில் மதம் மாறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறாமல் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் இன்னொரு கூட்டத்தை நான் கொண்டு வருவேன் என்று தான் சொல்கிறான்.
ஒரு உயிரைக் கொல்வது சம்பந்தமான இந்தப் பெரிய பிரச்சனைக்கு சரியான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குர்ஆனுடன் மோதுகின்ற கருத்தை இந்த ஹதீஸ் கூறுகிறது.
பெயரளவில் முஸ்லிமாக வேண்டுமா?
ஒருவன் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் தான் அவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும். மதம் மாறியவனுடைய உள்ளம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு மருத்துவம் காண அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது அவனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்ளைக் கொடுப்பது விவாதம் புரிவது போன்ற வழிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்.
கொலை செய்வதாக அவனை அச்சுறுத்துவது ஒரு போதும் இந்நோய்க்குரிய மருந்தாகாது. எனவே தான் குர்ஆன் மதம் மாறியவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதாகக் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை.
உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவனுடைய இஸ்லாம் அல்லாஹ்விற்குத் தேவையானதல்ல. அவனது வணக்க வழிபாடுகள் நற்செயல்கள் இவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
திருக்குர்ஆன் (9:54)
எந்தக் காரியத்தில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லையோ அந்த வேலையைச் செய்யுமாறு இஸ்லாம் சொல்லாது. நிர்பந்தமாக இஸ்லாத்தில் தள்ளப்பட்டவனுக்கு நன்மையான காரியங்களால் எந்த விதமான நன்மையும் மறுமையில் கிடைக்காது. மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் தூய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்காது. மாறாக இஸ்லாத்தை மனதளவில் வெறுத்துக் கொண்டு அதற்கெதிராகச் செயல்படும் நயவஞ்சகர்களைத் தான் உருவாக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படுத்தாத சட்டம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் எத்தனையோ நபர்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டு வேறொரு மதத்தைத் தழுவினார்கள். இவர்களில் ஒருவருக்காவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தன்டனையை விதித்ததாக ஆதாரப்பூர்வமான எந்தச் சான்றும் இல்லை. மாறாக மதம் மாறியவர்களைக் கொல்லாமல் விட்டதற்குத் தான் பல சான்றுகள் உள்ளன.
ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்கத்து குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எங்களில் யாராவது உங்களுடன் இணைந்து கொண்டால் அவரை மீண்டும் எங்களிடம் அனுப்பிவிட வேண்டும் உங்களில் யாராவது உங்களை விட்டும் விலகி எங்களிடம் வந்தால் நாங்கள் அவரை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்மிஸ்வர் பின் மஹ்ரமா (ரலி)
நூல் : அஹ்மத் (18152)
மதம் மாறியவர்களைக் கொல்வது இஸ்லாமியச் சட்டமாக இருந்திருந்தால் இந்த இஸ்லாமியச் சட்டத்திற்கு மாறு செய்யும் விதத்தில் அமைந்த இந்த ஒப்பந்தத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒத்திருக்க மாட்டார்கள். மாறாக எங்களிடமிருந்து பிரிந்து வருபவர்களுக்குக் கொலை தண்டனையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றே கூறியிருப்பார்கள். மக்கத்துக் காஃபிர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியச் சட்டத்தைத் தளர்த்தினார்கள் என்று சொல்ல முடியுமா?
صحيح البخاري
1883 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، فَجَاءَ مِنَ الغَدِ مَحْمُومًا فَقَالَ: أَقِلْنِي، فَأَبَى ثَلاَثَ مِرَارٍ، فَقَالَ: «المَدِينَةُ كَالكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طَيِّبُهَا»ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி 1883
இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் தனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாக அந்த கிராமவாசி எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்துவிட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார். மதம் மாறிவிட்ட இவரை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? மாறாக இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்பதை மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்கள் மட்டும் வைத்திருக்கும் என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.
அன்சாரிகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு மதம் மாறி இணைவைப்புக் கொள்கையில் இணைந்து கொண்டார். பின்பு (இதற்காக) வருத்தப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? என்று கேட்கும் படி தன்னுடைய கூட்டத்தாருக்குத் தகவல் தெரிவித்தார். அவரது கூட்டத்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இன்னார் (மதம் மாறியதற்காக) வருத்தப்பட்டு விட்டார். அவருக்கு மன்னிப்பு உண்டா? என்று உங்களிடம் கேட்கும் படி எங்களுக்குக் கூறியிருக்கிறார் என்று சொன்னார்கள்.
அப்போது தான் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (3:86) என்ற வசனம் இறங்கியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ (4000)
மதம் மாறிவிட்டவரைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இந்த நபித்தோழர் திருந்தி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்திருப்பாரா? இந்தப் படுமோசமான சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த சான்றாக உள்ளது.
صحيح البخاري
3617 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ، وَقَرَأَ البَقَرَةَ وَآلَ عِمْرَانَ، فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَادَ نَصْرَانِيًّا، فَكَانَ يَقُولُ: مَا يَدْرِي مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَقَالُوا: هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ مِنْهُمْ، نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ، فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَقَالُوا: هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ، نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ [ص:203] فَأَلْقَوْهُ، فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الأَرْضِ مَا اسْتَطَاعُوا، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَعَلِمُوا: أَنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ، فَأَلْقَوْهُ “ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 3617
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்து விட்டு பின்பு மதம் மாறிய இவரைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் உடனே நபித்தோழர்கள் அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவருக்கு மரணத்தைக் கொடுத்தான்.
நயவஞ்சகர்களில் இரு வகையினர் இருந்தனர். இவர்களின் ஒரு வகையினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று அறிந்து வைத்திருந்தார்கள். இன்னொரு வகையினரைப் பற்றி நபியவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் மட்டும் தான் இவர்களைப் பற்றி அறிந்தவன்.
முதல் வகையினர் பலமுறை தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தங்களின் இறை மறுப்பை வெளிப்படுத்தினார்கள். இறை மறுப்பாளர்கள் என்று தெரிந்த பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பிரார்த்தனை இவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்காது. நபியவர்களுடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் பாக்கியத்தை இழந்தார்கள். இவை மட்டும் தான் இவர்களுக்கு இந்த உலகத்தில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனை. இது அல்லாத தண்டனைகளை இவர்களுக்குத் தருகின்ற பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச்செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்! என்று கூறுவீராக! அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
திருக்குர்ஆன் (9:83)
இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.
திருக்குர்ஆன் (9:74)
நபித்தோழர்கள் இந்த நயவஞ்சகர்களை நாங்கள் கொல்லட்டுமா? என்று கேட்ட போது கூட மக்கள் தவறாகப் பேசுவார்கள் வேண்டாம் என்றே கூறினார்கள்.
صحيح البخاري
4907 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: كُنَّا فِي غَزَاةٍ فَكَسَعَ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ رَجُلًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ الأَنْصَارِيُّ: يَا لَلْأَنْصَارِ، وَقَالَ المُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ، فَسَمَّعَهَا اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا هَذَا؟» فَقَالُوا كَسَعَ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ رَجُلًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ الأَنْصَارِيُّ : يَا لَلْأَنْصَارِ، وَقَالَ المُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ» قَالَ جَابِرٌ: وَكَانَتِ الأَنْصَارُ حِينَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ، ثُمَّ كَثُرَ المُهَاجِرُونَ بَعْدُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ: أَوَقَدْ فَعَلُوا، وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ، فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَ هَذَا المُنَافِقِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ»நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளை விட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால் (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள் முஹம்மத் தன் தோழர்களைக் கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 4907