20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா?
பெண்ணின் உடன்பிறந்த சகோதரர் 20 வயதிற்குட்பட்டவராகவும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவராகவும், சுயமாகச் சம்பாதிக்கக்கூடிய நிலையையே இன்னும் அடையவில்லை (அதாவது தற்போது தான் இளநிலைக் கல்வியை ஆரம்பித்துள்ளார்) எனும்போது, அவரை அப்பெண்ணின் திருமணத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கலாமா?
பதில்
இஸ்லாத்தில் பொறுப்பையும் கடமைகளையும் சுமபப்தற்கு ஆண்களின் வயது 15 இருக்க வேண்டும்.
அப்போது முதல் அவன் மீது தொழுகை உள்ளிட்ட கடமைகள் சுமத்தப்படுகின்றன. போரில் பங்கெடுக்கும் கடுமையான சுமையைச் சுமப்பதற்கே 15 வயது போதுமாகும்.
صحيح البخاري
2664 – حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَهُ يَوْمَ أُحُدٍ، وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي ثُمَّ عَرَضَنِي يَوْمَ الخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي»، قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ وَهُوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الحَدِيثَ فَقَالَ: «إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالكَبِيرِ، وَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ»
2664 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும் போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்க வில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ அவர்கள் கூறுகிறார்கள்:
உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்கள் கலீஃபாவாக இருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், (அப்படியென்றால்) இது தான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும் என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்
எனவே உடன் பிறந்த சகோதரிக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கோ 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்பாளராக இருக்கலாம். 20 வயதுடையவர் பொறுப்பாளராக முடியாது எனக் கூறுவது மார்க்க ஆதாரத்தின் அடிப்படையிலான வாதம் அல்ல.