மகளை முடித்த மருமகனோ, மகனை முடித்த மருமகளோ ஒருவர்க்கு மற்ற மஹ்ரமான உறவுகளைப் போன்றவர்களா? பெற்றோர்கள், சொந்தப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இவர்களுடன் முஸாஃபஹா செய்வது போல் திருமண உறவினால் வந்த மருமகனிடமோ, மருமகளிடமோ முஸாஃபஹா செய்யலாமா?

இரத்த உறவுகளை அன்பின் வெளிப்பாடாக முத்தமிடுவது போல் திருமண உறவினால் வந்த மருமகனையோ, மருமகளையோ முத்தமிடலாமா? சில ஊர்களில் திருமணம், பெருநாட்களிலும், ஏனைய பல மகிழ்ச்சியான தருணங்களிலும், பயணம் புறப்படும் போதும் இவ்வாறு முத்தமிடும் வழக்கம் உள்ளது. மார்க்க அடிப்படையில் இது சரியா?

பதில்

எந்தப் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் தடை உள்ளதோ அந்தப் பெண்கள் மஹ்ரமான பெண்கள் என்று மார்க்கத்தில் கூறப்படுகிறது.

மஹ்ரமான பெண்கள் பற்றிய விபரம் பின்வரும் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (23)4

23. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23

ஆண்கள் இந்த உறவு முறையில் உள்ளவர்களை மனைவிகளாக்கிக் கொள்ளக் கூடாது.

மேலும் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்துள்ள இஸ்லாம் மஹ்ரமான பெண்களுடன் ஆண்கள் தனியாக இருப்பதை அனுமதிக்கிறது.

மஹ்ரமான உறவுகள் தாய், மகள், சகோதரி போன்ற இரத்த சம்மந்த உறவுகளாகவும் இருக்கலாம்.

திருமணம் மூலம் ஏற்படும் மாமியார், மருமகள் போன்ற உறவுகளாகவும் இருக்கலாம்.

குழந்தைப் பருவத்தில் அன்னியப் பெண்ணிடம் பால் குடித்த காரணத்தால் ஏற்படும் பாலூட்டிய தாய், பாலூட்டியவளின் மகள், பாலூட்டியவளின் சகோதரி போன்ற உறவுகளாகவும் இருக்கலாம்.

இந்த மூன்று வகை மஹ்ரமான உறவுகளுக்கும் சட்டங்களை வேறுபடுத்திச் சொல்லும் எந்த ஆதாரமும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இல்லை. எனவே மஹ்ரம் என்ற வகையில் அனைவரும் சமமானவர்களே.

மகளுடன் ஒருவன் தனியாக இருக்கலாம்; கை கொடுக்கலாம்; மனைவியுடன் மட்டும் உள்ள தீண்டுதல் அல்லாத வகையில் தொடலாம்; நெற்றியில் முத்தமிடலாம். இது போலவே மனைவியின் தாயாரிடமும் மகனின் மனைவியிடமும் நடந்து கொள்ளலாம். நடைமுறையில் இது வித்தியாசமாகப் பார்க்கப்பட்டாலும் மார்க்கத்தில் இதைத் தடுக்க ஒரு ஆதாரமும் இல்லை.

யாருக்கு முன்னால் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ் கூறும் போது கணவனின் தந்தைகளையும் குறிப்பிடுகிறான். அதாவது ஒரு பெண் மாமனார் முன்னாள் அலங்கரித்துக் கொள்ளலாம். இதை பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (31)24

31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

திருக்குர்ஆன் 24:31

இந்த விஷயத்தில் மதிக்கத்தக்க அறிஞர்கள் அனைவரும் ஒத்த கருத்தில் தான் உள்ளனர்.