45. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்
இவ்வசனங்கள் (2:180; 2:240; 4:11-12; 5:106) மரண சாசனம் செய்வது குறித்தும், வாரிசுரிமை குறித்தும் பேசுகின்றன.
வாரிசுரிமைச் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது என்று 2:180, 2:240 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
எந்தெந்த உறவினருக்கு எவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்ற சட்டம் (4:11-12, 4:176) அருளப்பட்டபின் மரண சாசனம் எழுதுவது கடமை இல்லை என்று ஆகிவிட்டது.
மரண சாசனம் செய்யும் கடமை நீக்கப்பட்டாலும் ஒருவர் விரும்பினால் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது.
திருக்குர்ஆன் 4:11-12 வசனங்களில் “சொத்தைப் பங்கிடுவதற்கு முன் மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம்.
ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.
ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்படும்.
“நான் எனது முழுச் சொத்தையும் அறப்பணிகளுக்காக மரண சாசனம் செய்யட்டுமா?” என்று ஸஅது (ரலி) அவர்கள் கேட்ட போது “மூன்றில் ஒரு பகுதி அளவு செய்! அதுவே அதிகம் தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
(நூல் : புகாரீ 3936, 4409, 5668, 6373)
எனவே உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பொதுக்காரியங்களுக்கும் மரண சாசனம் செய்வோர் 33 சதவிகிதத்துக்கு மிகாத வகையில் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.