47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்குப் பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன் பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச்சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.

சக்தியுள்ளவர்கள் நோன்பு தானே நோற்க வேண்டும். அவர்கள் எப்படி பரிகாரம் செய்ய முடியும் என்று இவர்கள் சிந்தித்ததால் இப்படி இல்லாத அர்த்தம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப திருக்குர்ஆனை வளைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது “நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. அது தான் இவ்வசனத்தில் (2:184) கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இது குறித்து புகாரீயில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.

நூல் : புகாரீ 4507

இதில் இருந்து தெரிய வருவது என்ன? நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம், அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இவ்வசனம் அருளப்பட்டது என்று தெரிகிறது.

மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகாரமும் செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது.

இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது.

ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததற்காகப் பரிகாரம் செய்ய வேண்டுமா என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும். ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம் செய்யச் சொல்கிறது. நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனும் (2:184ஆவது) வசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரீ 4505

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது.

ஹஜ் செய்ய வசதியில்லாதாவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை. அது போல் நோன்பு நோற்க சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

48. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை

இந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறாகும். எப்படி இது தவறாக உள்ளது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

மாதவிடாய் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டதோ அதற்கு விடையளிக்கும் விதமாகவே இவ்வசனம் அருளப்பட்டது. மாதவிடாய் சமயத்தில் வணக்க வழிபாடுகள் செய்யலாமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது குறித்து பதிலளிக்கும் வகையில் இறைவசனம் அருளப்பட்டிருக்கும். மாதவிடாய் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அதற்கு மட்டும் இவ்வசனத்தில் நேரடியாக விடையளிக்கப்பட்டது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபித்தோழர்கள், (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்கு நேரத்தில் பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 507

யூத சமுதாயத்தில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் மிகவும் இழிவாக நடத்தப்பட்டு வந்தனர். வீட்டுக்குள் பெண்களைச் சேர்க்க மாட்டார்கள். தனியாக ஒதுக்கி விடுவார்கள். பெண்களைத் தொடமாட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொட்ட பொருள்களையும் தொடமாட்டார்கள். இந்த மூட நம்பிக்கைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.

இதை மறுப்பதற்காகத் தான் இவ்வசனம் அருளப்பட்டது.

மாதவிடாய் நேரத்தில் உடலுறவு தவிர மற்றவைகளுக்குத் தடை இல்லை என்றால், யூதர்கள் தாமாகத் தடை செய்து கொண்ட காரியங்களுக்குத் தடை இல்லை என்ற கருத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். வணக்க வழிபாடுகள் செய்ய அனுமதி உண்டு என்று புரிந்து கொள்ளக் கூடாது.

திருக்குர்ஆனின் 5:6 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது குளிப்புக் கடமையானவர்களாக நீங்கள் இருந்தால் தூய்மையாகிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.

தொழுகைக்கு தூய்மை அவசியம் என்று இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.

திருக்குர்ஆனின் 4:43 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது குளிப்பு கடமையானவர்களாக நீங்கள் இருந்தால், குளித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறான். அந்தத் தூய்மை குளிப்பது தான் என்பதை இவ்வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் பற்றிக் குறிப்பிடும் மேற்கண்ட வசனத்தில் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மாதவிடாயின் போது பெண்கள் தூய்மை இல்லாமல் உள்ளனர் என்று இவ்வசனம் கூறுவதாலும், தூய்மை இல்லாமல் தொழக் கூடாது என்று 4:43, 5:6 ஆகிய வசனங்கள் கூறுவதாலும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்கும் போது மாதவிடாயின் போது தொழக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை தவாஃப் செய்வது ஆகிய வணக்கங்களில் ஈடுபடுவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதுமே அவர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதை புகாரீ 228, 304, 306, 320, 325, 331 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

மாதவிடாய் நேரத்தில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை புகாரீ 1951 ஹதீஸில் காணலாம்.

மாதவிடாய் நேரத்தில் தவாஃப் செய்யக் கூடாது என்பதை புகாரீ 294, 305, 1650, 5548, 5559 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

மற்ற விஷயங்களில் எல்லாப் பெண்களையும் போல் எல்லாப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடலாம்.