66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா?
2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ, அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும். இதனால் கீழ்க்காணும் தீமைகள் நிலவுவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம்.
1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; அவளைப் பராமரிக்கவும் மாட்டான்.
2. அல்லது எளிதில் விவாகரத்து பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
3. அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான்.
இஸ்லாம் அல்லாத மதங்களில் விவாகரத்தை அனுமதிக்காததாலும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருப்பதாலும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம்.
எனவே பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் இஸ்லாம் எளிதாக்கியிருக்கிறது.
விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.
முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.
அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.
அதுவும் பயன் தராத போது அடித்துத் திருத்த வேண்டும் என்று திருக்குர்ஆன் 4:34 வசனம் கூறுகிறது.
மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல் : புகாரீ 1294, 1297)
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமை ஏற்றவர்களை விட, அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.
ஆண் வலிமை உள்ளவனாகவும், பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு பாதுகாவலரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது சில நேரங்களில் நடந்தே தீரும். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.
இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும். இதனால் தான் மனைவியரைத் துன்புறுத்துவது மற்றவர்களை விட முஸ்லிம்களிடம் குறைவாகவே இருக்கிறது.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.
இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
“உன்னை விவாகரத்துச் செய்கிறேன்” என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பின் பெண்களுக்குப் பாதுகாப்புத் தொகை வழங்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளதால் அதைத் தீர்மானித்து பெற்றுத் தருவதற்கேற்ப ஜமாஅத்தினர் முன்னிலையில் இதை உறுதி செய்ய வேண்டும்.
வேறு எந்தச் சடங்குகளும் இல்லை.
விவாகரத்துச் செய்திட ஒவ்வொரு கணவனுக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் திருமண உறவு அடியோடு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க : திருக்குர்ஆன் 65:4)
இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.
முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.
மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை முறைப்படி விவாகரத்துச் செய்துவிட்டால் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
(திரும்பவும் அழைத்துக் கொள்ளத் தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான் என்று கூறும் 2:229 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு தடவை தான் விவாகரத்து நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2932, 2933, 2934
ஒரு நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக், மூன்று தலாக்காகவே கருதப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.
விவாகரத்துச் செய்த உடன் மனைவியை ஆதரவற்ற நிலையில் விட்டு விடக் கூடாது. அவளது எதிர்காலப் பாதுகாப்புக்காக போதுமான பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும். இதைச் செய்து கொடுப்பது ஜமாஅத்தார்களின் கடமையாகும்.
இது பற்றி அறிய 74வது குறிப்பை வாசிக்கவும்.
இது ஆண்கள் விவாகரத்துச் செய்வது குறித்த சட்டமாகும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாமில் உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாமில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழ எனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
நூல் : புகாரீ 5273, 5275, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த பெண்களுக்கான விவாகரத்து நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து அவள் பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும். இதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவர்களுக்குத் தான் நல்லது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின் அதிகச் சிரமத்துக்கு பெண்களே ஆளாவதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வரக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் பெண்களுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே பெண்களுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழியை உலகில் எங்குமே காணமுடியாது. இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியுள்ளனர்.
திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே (4:21) என்றும்
கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (2:228) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்படாவிட்டால் தீய விளைவுகள் ஏற்படுவது போல் பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
விஷம் கொடுத்துக் கணவரைக் கொல்கிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது. இதை 2:228-232 ஆகிய வசனங்களில் காணலாம்.
விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 69, 70, 74, 386, 402, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க!