101. முன்னர் பலர் சென்றுவிட்டனர் என்பதன் கருத்து என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்ல என்பதை இவ்வசனம் (3:144) வலியுறுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் முஸ்லிம்கள் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது என்றும், இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்றும் இவ்வசனம் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டுள்ளது என்பது எளிதாக விளங்குகிறது.
ஆயினும் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் இவ்வசனத்தைத் தமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட தூதர்கள் இறந்து விட்டனர் என்று இவ்வசனம் கூறுவதால் ஈஸா நபியும் இறந்து விட்டார்கள் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது என்று வாதிடுகின்றனர்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் இவ்வசனத்தில் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் நபியவர்கள் மரணித்ததை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித் தான் நபித் தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வரலாறு புகாரீ (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
“ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று நபித்தோழர்கள் எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்” எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இவ்வாறு வாதம் செய்வதற்கு ஏற்ற வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது உண்மை தான். ஆனால் திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகினால் இவ்வாதம் முற்றிலும் தவறானது என்று அறிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது திருக்குர்ஆனை அணுகும் சரியான வழியல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? விதி விலக்குகள் உள்ளனவா? என்று தேடிப் பார்க்க வேண்டும். அது குறித்துக் கூறப்பட்ட அனைத்தையும் திரட்டி, ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே திருக்குர்ஆனை அணுகும் சரியான முறையாகும்.
ஒரு வசனத்தில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு வசனங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் திருக்குர்ஆனின் தனி நடையாகும்.
உதாரணமாக மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டான் என்பதில் எல்லா மனிதர்களும் அடங்குவார்கள். ஆனாலும் வேறு வசனங்களில் முதல் மனிதர் மண்ணால் படைக்கப்பட்டதாகக் கூறப்படுவதால் இதில் இருந்து ஆதம் (அலை) அவர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்று புரிந்து கொள்கிறோம்.
அது போல் ஆதமின் துணைவியார், ஆதமில் இருந்து படைக்கப்பட்டதாக வேறு வசனத்தில் கூறப்படுவதால் அவருக்கும் இதில் விதிவிலக்கு உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.
ஈஸா நபி தந்தையின்றி பிறந்ததாக திருக்குர்ஆன் சொல்வதால் அவருக்கும் இதில் விதிவிலக்கு உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.
அது போல் “முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்” என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் வேறு வசனங்களில் ஈஸா நபிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
ஈஸா நபி, கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று 43:61 வசனம் கூறுகிறது.
உலகம் அழியும் நாளின் அடையாளமாக ஈஸா நபி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இன்னும் இறக்கவில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இல்லை. இவ்வசனத்திற்கான விளக்கத்தை 342வது குறிப்பில் காணலாம்.
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று 4:159வது வசனம் கூறுகிறது.
ஈஸா நபி மரணித்து இருந்தால் அவரது மரணத்துக்கு முன் ஈமான் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. இவ்வசனத்திற்கான விளக்கத்தை 134வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
இவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன.
எனவே இவ்விரு வசனங்களையும், “அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்” என்பதையும் இணைத்து “ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்” என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.
நபிகள் நாயகத்துக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் என்று 3:144 வசனம் கூறுவது போல் ஈஸா நபியைக் குறித்தும் இதே வாசகம் 5:75 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனம் இது தான்:
மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) தூதரைத் தவிர வேறு இல்லை. அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கையுடையவராவார். அவ்விருவரும் உணவை உட்கொண்டவர்களாக இருந்தனர். நாம் அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று கவனிப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
திருக்குர்ஆன் 5:75
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து “அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று 5:75 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் “ஈஸா நபிக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று குறிப்பிடுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.
ஈஸா நபி அவர்கள் எல்லா மனிதர்களையும் போல் மரணித்து விட்டனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அதைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அவர் மரணித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். அவருக்கு முன்னர் பலர் மரணித்து விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறாமல் அவருக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறுகிறது.
இவருக்கு முன்னர் பலர் இறந்து விட்டனர் என்று சொன்னால் இவர் இன்னும் இறக்கவில்லை என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது என்று தான் யாருமே புரிந்து கொள்வார்கள்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.
அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
மேலும் ஈஸா நபி பற்றிய மேற்கண்ட வசனம் எந்தக் கருத்தைச் சொல்வதற்காக அருளப்பட்டது? ஈஸா நபியைக் கடவுளாகக் கருதிய மக்களுக்கு மறுப்பு சொல்வதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது. அவரும், அவரது தாயாரும் உணவு உண்பவர்களாக இருந்தனர் என்று கூறி இதிலிருந்து அவர்களுக்கு கடவுள் தன்மை இல்லை என்று இவ்வசனத்தில் அல்லாஹ் மறுக்கிறான்.
ஈஸா நபிக்கு கடவுள் தன்மை இல்லை என்பதற்கு அவர்கள் உணவு உட்கொண்டவர்களாக இருந்தது ஒரு ஆதாரம் என்றாலும் ஈஸா நபி மரணித்து இருந்தால் அது தான் இதைவிட வலுவான ஆதாரமாகும். அவர் உணவு உண்டார் எனக் கூறி அவரது கடவுள் தன்மையை மறுப்பதை விட அவர் மரணித்து விட்டார் என்று கூறுவது வலுவான மறுப்பாக அமையும்.
“ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்தை இது தான் அழுத்தமாகச் சொல்லும்.
ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக ஆக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனியுங்கள்.
“ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஞானமிக்கவன்; நுண்ணறிவாளன்; அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் அதற்கு எதிரான கருத்தைத் தரும் வகையில் இறைவன் இப்படிக் கூறியிருக்க மாட்டான்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவது உண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு, அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அவரது மரணத்தையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.
எனவே ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக இவர்கள் எடுத்து வைத்த இவ்வசனம் அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல.
ஈஸா நபி இறுதிக்காலத்தில் வருவார்கள் என்ற கருத்திலமைந்த ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித்தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை அவர்கள் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அதுபோல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை” என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
அனைவருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.
எனவே, இவ்வசனம் (3:144) ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல் அமைந்த 5:75 வசனம் ஈஸா நபி இதுவரை மரணிக்கவில்லை என்ற விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.
ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக் காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி மேலும் அறிய 93, 133, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!