110. மாற்றப்பட்ட கலாலா சட்டம்
சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது.
கலாலா என்ற சொல்லுக்கு தூரத்து உறவினர் என்பது பொருள். தாய், தந்தை, மகன், பேரன் போன்ற உறவினர்கள் இல்லாத ஒருவரை கலாலா என்பார்கள். அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் இக்கருத்திலேயே உள்ளனர்.
இவ்வசனம் (4:176) பிள்ளை இல்லாவிட்டால் கலாலா என்ற கருத்து வருமாறு அமைந்துள்ளது. பிள்ளையோ, தந்தையோ, பாட்டனோ, பேரனோ இல்லாதவன் தான் கலாலா என்பதற்கு என்பதற்கு மாற்றமாக இது அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.
ஆனால் இவ்வசனத்தில் பிள்ளை இல்லாவிட்டால் என்று மட்டும் சொல்லப்படவில்லை. யார் இருக்கிறார் என்றும் சேர்த்து சொல்லப்படுகிறது. பிள்ளை இல்லாமல் சகோதரி இருந்தால் என்று இதில் சொல்லப்படுகிறது. எது இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுடன் எது இருக்க வேண்டும் என்று சேர்த்து சொல்லும் போது எவ்வாறு புரிந்து கொள்வது?
இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு எண், அட்ரஸ் புரூப் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அடையாள அட்டைகளாக உள்ளன. இவற்றில் வாக்காளர் அட்டை மட்டுமே ஒருவரிடம் உள்ளது. மற்ற எதுவும் அவரிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே உள்ளது என்று அவர் கூறலாம். மற்றவை இல்லை என்ற கருத்து அதனுள் அடங்கிவிடும்.
என்னிடம் ஆதார்கார்டு இல்லை. வாக்காளர் அட்டை தான் உள்ளது என்றும் கூறலாம்.
ஆதார் கார்டு இல்லை என்ற சொல் மற்றவை இருக்கலாம் என்ற கருத்தைத் தந்தாலும் வாக்காளர் அட்டை தான் உள்ளது என்று சேர்த்துச் சொல்வதால் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற கருத்தைத் தரும்.
ஆதார் கார்டு இல்லை என்பது ஆதார் கார்டு போன்றவை இல்லை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும். இது எல்லா மொழிகளிலும் உள்ள சொல் வழக்காகும்.
பிள்ளை இல்லாமல் சகோதரி இருந்தால் என்று சொல்லும் போது பிள்ளை போன்ற உறவுகள் இல்லாமல் சகோதரி மட்டும் இருந்தால் என்ற கருத்தைத் தரும். எனவே சகோதரி இருந்தால் என்ற சொல் மூலம் பிள்ளைகளும், பெற்றோரும் இல்லாத உறவுகள் தான் கலாலா என்ற கருத்து பெறப்படுகிறது.
இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன் (4:176) என்று கூறப்படுகிறது
ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.
ஒரு சகோதரி இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி என்று 4:176 வசனம் கூறுகிறது.
இரண்டும் முரண்படுவதால் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.
சிலர் கலாலா என்ற சொல்லுக்கு இந்த வசனத்தில் ஒரு விளக்கமும், 176வது வசனத்தில் வேறு விளக்கமும் கூறியுள்ளனர். இது தவறாகும்.
கலாலா என்ற சொல்லுக்கு சந்ததியில்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவர் என்று 176வது வசனத்தில் அல்லாஹ்வே விளக்கம் கூறி விட்டதால் மற்றவர்கள் கூறும் விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.
சந்ததிகள் இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவரைப் பற்றித் தான் இரண்டு வசனங்களும் கூறுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அப்படியானால் இரண்டு வசனங்களிலும் வெவ்வேறு அளவுகள் ஏன் கூறப்படுகின்றன? இதற்கு புகாரீயில் இடம் பெற்ற ஹதீஸ் விடையளிக்கிறது.
திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரீ 4605)
எனவே 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்பதே சரியாகும்.