120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்
இவ்வசனத்தில் (4:59) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றும், அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்றும் கூறப்படுகிறது,
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டு தலையும் மட்டுமே இஸ்லாமின் மூல ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
அந்தச் சான்றுகளைப் புறக்கணித்து விட்டு, மார்க்க அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வசனத்தை (4:59) இவர்கள் தமக்குரிய சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்; தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதுடன், “உலுல் அம்ருக்கும் கட்டுப்படுங்கள்” என்று இவ்வசனம் கூறுகின்றது. உலுல் அம்ரு என்பது மார்க்க அறிஞர்களைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் வாதம்.
இவ்வாதம் முற்றிலும் தவறாகும். இவ்வசனத்தில் உலுல் அம்ருக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறப்பட்டுள்ளது உண்மை தான். உலுல் என்றால் உடையவர் என்பது பொருள். அம்ரு என்றால் அதிகாரம் என்று பொருள். உலுல் அம்ரு என்றால் அதிகாரம் உடையவர் என்பது பொருளாகும்.
உலுல் அம்ரு என்ற சொல்லுக்கு மார்க்க அறிஞர்கள் என்ற பொருள் அறவே கிடையாது.
மார்க்கச் சட்டதிட்டங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்றாலும், மார்க்கம் சம்பந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கும் கட்டுப்பட வேண்டிய நிலைமை முஸ்லிம்களுக்கு ஏற்படாமல் இருக்காது.
நாட்டின் அதிபர்கள், பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவது இஸ்லாமுக்கு முரணாக அமையுமோ என்ற சந்தேகம் ஏற்படலாம். அந்தச் சந்தேகத்தை நீக்கிடவே “அதிகாரம் படைத்தவருக்கும் கட்டுப்படுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்படுகின்றது
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படும் போது, கட்டுப்படத் தக்கவை, கட்டுப்படத் தகாதவை என்ற இரண்டு நிலைகள் கிடையாது. அனைத்தையும் ஏற்று நாம் செயல்படுத்தியாக வேண்டும். ஆனால் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படும் போது அவர்களின் கட்டளை, திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரணாக இருக்கலாம்; அல்லது திருக்குர்ஆனுக்கும் நபி வழிக்கும் முரணில்லாமல் இருக்கலாம்.
எவை திருக்குர்ஆனுக்கும், நபி வழிக்கும் முரணில்லாமல் இருக்கிறதோ அவற்றில் மட்டுமே அதிகாரம் உடையவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் தான், இவ்வசனத்தின் இறுதியில், “(ஏதேனும் ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படுகின்றது.
எனவே, இவ்வசனம் மார்க்க அறிஞர்களுக்குக் கட்டுப்படுவதைப் பற்றிப் பேசவில்லை. மார்க்கத்திற்கு முரணான விஷயங்களில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அனுமதிக்கவில்லை.
பொதுவாகத் தங்கள் மீது மக்கள் வைக்கும் பக்தியையும், அளவு கடந்த நம்பிக்கையையும் அடிப்படையாக வைத்தே தலைவர்கள் மக்களை ஏமாற்றியும், வழிகெடுத்தும் வருகின்றனர். இத்தகையோரிடமிருந்து மக்களைக் காப்பாற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்வசனம் பெரிதும் துணை செய்யும்.
ஒருவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அறிஞராக இருந்தாலும், மகானாக இருந்தாலும், அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அவர் கூறுவது திருக்குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரணில்லாமல் இருந்தால் மட்டுமே அவர் கூறுவதைக் கேட்கலாம். இந்த அளவுகோலை எப்போதும் மறவாமல் நினைவில் வைத்திருப்பவர்களை மார்க்கத்தின் பெயரால் யாராலும் வழிகெடுத்து விட முடியாது.