126. போர்க்களத் தொழுகை

இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது. போர்க்களத் தொழுகை குறித்து ஹதீஸ்களில் மாறுபட்ட இரு விதமான தகவல்கள் கிடைக்கின்றன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இரு ரக்அத்கள் தொழுதார்களோ அது போல் நபித்தோழர்களும் இரு ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் இரு ரக்அத்கள் தொழுதார்கள். நபித்தோழர்கள் ஒரு ரக்அத் தான் தொழுதார்கள் என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுவித்தார்கள். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்று கொண்டிருந்த இடத்தில் நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுது விட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களுடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதமிருந்த) தங்களுடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 4133

நபித்தோழர்கள் இரு அணிகளாகப் பிரிந்து ஒரு அணியினர் களத்தில் நின்றார்கள். இன்னொரு அணியினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் ஒரு ரக்அத் தொழுதவுடன் களத்திற்குச் சென்றார்கள். களத்திற்குச் சென்றவர்கள் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்த உடன் இந்த இரண்டாம் அணியினர் எழுந்து மற்றொரு ரக்அத் தொழுது முடித்து களத்திற்குச் சென்றார்கள். களத்தில் நின்ற அணியினர் வந்து தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுதார்கள் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

நஸாயீ உள்ளிட்ட பல நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் இரு ரக்அத்கள் தொழுதார்கள். முதல் ரக்அத்தில் ஒரு அணியினர் சேர்ந்து தொழுதார்கள். மற்றொரு ரக்அத்தில் நபியைப் பின்ற்பறி இரண்டாம் அணியினர் சேர்ந்து தொழுதார்கள். விடுபட்ட ரக்அத்தை களா செய்யவில்லை என்று நஸாயீ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முரண்பட்ட இந்த அறிவிப்புகளில் இரண்டாம் அறிவிப்பு தான் சரியான கருத்தாக உள்ளது. ஏனெனில் போர்க்களத் தொழுகையில் ஒரு ரக்அத் தான் கடமையாக்கப்பட்டதாக ஹதீஸ்கள் உள்ளன.

உள்ளூரில் நான்கு ரக்அத்கள், பயணத்தில் இரு ரக்அத்கள், போர்க்களத்தில் ஒரு ரக்அத் என தொழுகையை அல்லாஹ் கடமையாக்கினான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்.

போர்க்களத்தில் கடமை ஒரு ரக்அத் தான் எனும் போது நபித்தோழர்கள் இன்னொரு ரக்அத் தனியாகத் தொழும் அவசியம் இல்லை என்பதால் தனியாகத் தொழவில்லை என்ற அறிவிப்பு தான் சரியானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வசனமும் இதே கருத்தைத் தான் சொல்கிறது. போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் அனைத்து தொழுகைகளையும் இமாம் இரண்டு ரக்அத்தாக நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணிகளாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க வேண்டும்; மற்றொரு அணியினர் இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும். ஒரு ரக்அத் தொழுததும் அவர்கள் களத்திற்குச் சென்று விட வேண்டும். தொழாத அணியினர் வந்து தொழுகையில் சேர வேண்டும். இவர்கள் வரும் வரை இமாம் தொழுகையை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். போர்க்களத்தில் எல்லாத் தொழுகையும் ஒரு ரக்அத் தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இமாம் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்பதைப் பொதுவானதாக விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவ்வசனத்தின் துவக்கத்தில் “நீர் அவர்களுடன் இருந்து” “நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்” என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாமல் விட்டால் அந்த மக்கள் வருத்தம் அடைவார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும் போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும். இந்த வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் போது போர்க்களத்தில் இமாம் இரு ரக்அத்கள் தொழுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ள சிறப்புச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.