136. திருவுளச் சீட்டுகூடுமா?

அம்புகள் மூலம் குறிபார்ப்பது கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90) சொல்லப்பட்டுள்ளது.

கடவுள் எனக் கருதும் சிலைகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்பது அரபுகளின் வழக்கமாக இருந்தது.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், ‘செய்’ என்று ஒரு அம்பில் எழுதுவார்கள்; ‘செய்யாதே’ என்று மற்றொரு அம்பில் எழுதுவார்கள். கண்ணை மூடிக் கொண்டு அதில் ஒரு அம்பை எடுப்பார்கள். அதில் எழுதப்பட்டது தான் கடவுளின் கட்டளை என்று கருதிக் கொள்வார்கள்.

இவ்வசனங்களின் மூலம் அது தடை செய்யப்படுகின்றது.

அம்புகளைப் பயன்படுத்திக் குறி கேட்பது மட்டும் தான் தடை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படையில் அமைந்த அனைத்துக் காரியங்களும் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

‘பால்கிதாபு’ என்ற பெயரில் முஸ்லிம்களிடம் காணப்படும் மூட நம்பிக்கையும் இத்தடையில் அடங்கும். மனிதனுக்குக் கட்டளையிடுகின்ற அதிகாரத்தை மனிதனால் உருவாக்கப்பட்டவைகளுக்கு வழங்குவது தவறாகும்.

நாம் கண்ணை மூடிக் கொண்டு ஒரு சீட்டை எடுத்து விட்டு, அல்லாஹ்வின்  விருப்பம் இது தான் எனக் கூறுவது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவும் அமையும். அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதை எங்களால் அறிந்து கொள்ள முடியும் என்ற அம்சமும் இதனுள் அடங்கியுள்ளது.

சில நேரங்களில் சீட்டுக் குலுக்கிப் போட்டு சில காரியங்களை நாம் முடிவு செய்வதுண்டு. அதையும், இதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இரண்டு நபர்களுக்கிடையே ஒருவரைத் தேர்வு செய்யும் போது இருவரும் சமமான நிலையில் இருந்தால் சீட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்வு செய்கிறோம். இது மற்றவர் மனம் கோணாமல் ஒதுங்கிக் கொள்வதற்குரிய ஏற்பாடாகும்.

திருவுளச்சீட்டு, பால்கிதாபு என்பது, கடவுளின் நாட்டத்தை அறிந்து கொள்ளும் வழி என்று கருதப்படுவதால் அது தடுக்கப்படுகிறது. சமநிலையில் உள்ள இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும் போது இதுபோன்ற நம்பிக்கை இருப்பதில்லை.

ஒரு காரியத்தைச் செய்வதில் நன்மையா? தீமையா? என்று குழப்பம் ஏற்படும் போது ‘இஸ்திகாரா’ எனும் சிறப்புத் தொழுகை தொழுது, “இறைவா! இக்காரியம் நன்மை தரும் என்றால் அதில் என்னை ஈடுபடச் செய்! இல்லாவிட்டால் என் கவனத்தை அக்காரியத்திலிருந்து திருப்பி விடு!” என்று பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. (பார்க்க: புகாரீ 1166, 6382, 7390)