173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

குறிப்பிட்ட சில குற்றங்களைச் செய்தவர்கள் நிரந்தரமான நரகத்தை அடைவார்கள் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் கூறுகிறது. ஆயினும் இவ்வசனங்களில் (6:128, 11:107, 11:108) அதில் விதிவிலக்கு உள்ளதாகக் கூறுகிறது.

நிரந்தரமான நரகம் என்று கூறி விட்டு அல்லாஹ் நாடியதைத் தவிர என்று கூறப்படுவதற்குப் பலரும் பலவிதமாக விளக்கம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்ற நம்பிக்கையுடையவர்களுக்கு இதில் குழப்பம் ஏற்படத் தேவையில்லை.

எந்தக் குற்றங்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறினானோ அதுவே முடிந்த முடிவல்ல. அல்லாஹ் நாடினால் அதிலும் சிலருக்கு விதிவிலக்கு அளிப்பான் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. நான் நினைத்ததைச் செய்யும் அதிகாரம் படைத்தவன் என்று காட்டுவதற்காக சிலருக்கு இந்த விதிவிலக்கையும் அளித்துள்ளான்.

நிரந்தரமான நரகம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அவனுக்கு இருப்பது போல சிலருக்கு அதில் விதிவிலக்கு அளிக்கவும் அதிகாரம் இருக்கிறது. அவனது விதிவிலக்கைப் பெறுவோர் யார் என்று மறுமையில் தான் தெரியும் என்று நம்பினால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.