196. பத்ருப்போர் வனிகர்களைக் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டதா?

இவ்வசனங்களில் (3:123, 8:42, 8:7) பத்ருப்போர் குறித்து சொல்லப்படுகிறது.

மக்காவில் இருந்து வணிகக் கூட்டம் வருவதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காக படை நடத்திச் சென்றார்கள். மக்காவின் தலைவர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்தது. வணிகக் கூட்டத்தைக் காப்பாற்ற அவர்கள் படை திரட்டி வந்தார்கள். இதனால் வணிகர்களை வழி மறிப்பதற்காகப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்காவில் இருந்து வந்த படையுடன் போர் செய்யும் நிலை ஏற்பட்டது. பத்ர் எனும் பள்ளத்தாக்கில் இப்போர் நடந்ததால் இது பத்ர் போர் எனப்படுகிறது.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் முஹம்மது நபி கொள்ளைக்காரராக இருந்தார் என்கிறார்கள். போர் செய்ய வராத வனிகர்களை ஏன் வழிமறிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தனி மனிதர்களின் நடவடிக்கைகளைத் தான் தனி மனிதனின் பார்வையில் அணுக வேண்டும்.

நாடுகளின் நடவடிக்கைகளை நாடுகளுக்கான பார்வையில் அணுக வேண்டும். இந்த அடிப்படையை விளங்காமல் தான் பத்ர் போர் குறித்து தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.

தனி மனிதர்களுக்கு உடமையான நிலப்பரப்புக்கள் இருப்பது போல் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய நிலப்பரப்புக்கள் உள்ளன. அந்த நிலப்பகுதிக்குள் வேறு நாட்டவர் நுழைய வேண்டுமானால் உரிமை படைத்த நாட்டின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதி இல்லாமல் அன்னிய நாட்டவர் எந்த நாட்டிலும் நுழைய முடியாது.

அப்படி நுழைந்தால் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வார்கள். அத்துமீறி நுழைந்தவர்களை கைது செய்வார்கள்

அதிலும் எதிரி நாடாக அறிவிக்கப்பட்ட நாட்டவர் நுழைந்தால் நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையாண்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த தகவல் ஒற்றர்கள் மூலம் கிடைத்த போது அரசாங்கக் கடமையைச் செய்யத் தான் வணிகக் கூட்டத்தை வழி மறிக்கச் சென்றார்கள்.

இதில் கொள்ளயடித்தல் என்ற பிரச்சனைக்கே இடமில்லை.