210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்

இவ்வசனத்தில் (9:118) மூன்று நபர்களை அல்லாஹ் மன்னித்ததாகச் சொல்கிறான்.

மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் தபூக் போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப் புறப்படவில்லை. பிறகு சென்று போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து பயணத்தைத் தாமதப்படுத்தினார்கள். நாளை போகலாம், அடுத்த நாள் போகலாம் என்று காலம் கடத்தி கடைசியில் அம்மூவரும் அப்போரில் பங்கெடுக்கவில்லை.

இதனால் அம்மூவருடனும் எந்தவித உறவும் வைக்கலாகாது என்று முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

அம்மூவரும் தமது செயலுக்காக மிகவும் வருந்தினார்கள். எனவே அவர்களை இறைவன் மன்னித்தான். அதைத் தான் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

சமுதாயத் தவறு செய்பவர்களை ஒதுக்கி வைக்கலாம் ; ஊர் நீக்கம் செய்யலாம் என்பதற்கு இந்த வசனத்தையும் இந்த சம்பவத்தையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலர் மீது சமூகப் புறக்கணிப்பு செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அதை அல்லாஹ் அங்கீகரித்தானா என்று பார்க்க வேண்டும்.

இது குறித்து பேசும் முழு வசனங்களைப் பார்ப்போம்.

117. இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

118. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

118 வசனத்தில் அந்த மூவரையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறினாலும், அதற்கு முந்தைய 117 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அன்சார்களையும், முஹாஜிர்களையும், சிரமமான காலத்தில் நபியைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான் எனக் கூறுகிறான்.

இம்மூவரும் போருக்குச் செல்லாமல் இருந்த குற்றத்துக்காக அவர்களை மன்னித்தான்.

ஆனால் நபிகளையும், அன்சார்களையும், முஹாஜிர்களையும் ஏன் மன்னித்ததாக அல்லாஹ் கூற வேண்டும்? இந்தச் சம்பவத்தில் அவர்களை மன்னிக்க ஒன்றும் இல்லையே? அவர்கள் தான் நெருக்கடியான கட்டத்தில் போரில் கலந்து கொண்டவர்களாயிற்றே என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அன்சார்களும், முஹாஜிர்களும், நெருக்கடியான கட்டத்தில் நபிக்குப் பக்க பலமாக இருந்தவர்களும் மூன்று நபித்தோழர்களையும் சமூகப் புறக்கணிப்பு செய்ததும், அவர்களுடன் பேசாமல் இருந்ததும், அம்மூவரையும் மனைவியரை விட்டு விலகி இருக்குமாறு சொன்னதும் தவறு என்று எடுத்துக்காட்டவே அவர்களை மன்னித்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

அதனால் தான் அம்மூவரையும் மன்னிப்பதற்கு முன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்களை மன்னித்ததாக அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இப்படிச் செய்யக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு சமூகப் புறக்கணிப்பு செய்யும் அதிகாரம் இல்லை என்பதை விளங்கலாம்.

இந்தச் சம்பவத்தை விரிவாக அறிய புகாரீ 4418, 4676, 4677, 6690 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கவும்.