235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?

இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யஃகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு யஃகூப் நபியவர்கள் கூறியதாக சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இவ்வாறு விளங்குவதற்கு இந்த வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கம் தரவில்லை.

இவ்வசனத்தைப் பார்க்கும் போது, இது கண் திருஷ்டியைப் பற்றிக் கூறவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பொருள்கள் விநியோகிக்கப்படும் இடங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒன்று திரண்டு பெற முயற்சிக்கும் பொழுது மற்றவர்கள் அதை வெறுப்புடன் பார்க்கும் நிலைமை ஏற்படும். இது போன்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே யஃகூப் நபி அவர்கள் ஒருவாசல் வழியாக நீங்கள் செல்ல வேண்டாம். பிரிந்து பிரிந்து செல்லுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும்.

எனவே இவ்வசனங்களுடன் கண் திருஷ்டியைத் தொடர்புபடுத்திக் கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.