318. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி
இவ்வசனத்தில் (33:21) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இவ்வசனம் இஸ்லாமின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தரும் வசனமாகும்.
தவறான கொள்கையில் உள்ள சிலர் திருக்குர்ஆனை மட்டும் தான் நாங்கள் பின்பற்றுவோம்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் எனக் கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வேலை திருக்குர்ஆனைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது தான். அத்துடன் அவர்களின் வேலை முடிந்து விட்டது என்று கூறி தங்கள் கொள்கையை நியாயப்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது. திருக்குர்ஆனைக் கொண்டு வந்து தருவது மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி அல்ல. அதற்கு மேலும் அவர்களுக்கு வேலை உள்ளது என்று இவ்வசனம் கூறுகிறது.
உஸ்வத் – முன்மாதிரி என்றால் ஒருவரது செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும். ஒருவர் கொண்டு வந்து தந்த புத்தகத்தைப் பெற்று அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும், அந்தப் புத்தகத்தில் உள்ளபடி நடப்பதற்கும் உஸ்வத் – முன்மாதிரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை.
“ஒரு தபால்காரர் நம்மிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தருகின்றார். அதை நாம் வாங்கிக் கொள்கின்றோம். பின்னர் அதை வாசிக்கிறோம். அதன் பின்னர் அதில் கூறப்பட்டவாறு செயல்படுகிறோம்” என்று வைத்துக் கொள்வோம். “நாம் தபால்காரரை முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டோம்” என்று யாரும் கூறுவதுண்டா? அப்படி யாரேனும் கூறினால் அவரது அறிவை நாம் சந்தேகப்பட மாட்டோமா?
இவ்வாறு கூறுவோருக்கும், ஹதீஸ்கள் வேண்டாம் என்று கூறுவோருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
ஏனெனில் புத்தகத்தைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி; அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இப்போது இவர்கள் திருக்குர்ஆனையே மறுக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன்மாதிரியாக அனுப்பப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரி தேவையில்லை என்போர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் மறுப்பவர்கள் என்ற கடுமையான எச்சரிக்கை இவ்வசனத்தில் உள்ளது.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்று இவ்வசனம் தெளிவாகவே கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நடவடிக்கை மூலம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அல்லாஹ் கூறுவது எப்போது சாத்தியமாகும்? ஹதீஸ்களை ஏற்றுச் செயல்பட்டால் தான் சாத்தியமாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கை ஹதீஸ்களில் தான் கிடைக்கும்.
திருக்குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!