338. சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம்

அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வசனத்தை (38:34) பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளனர்.

நிச்சயமாக நாம் ஸுலைமானைச் சோதித்தோம். மேலும் அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பின்னர் அவர் (நம்மிடம்) திரும்பினார்.

ஆனால் நாம் இவ்வசனத்துக்குப் பின்வருமாறு தமிழாக்கம் செய்துள் ளோம்.

ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். “என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார்.

ஸுலைமான் நபி ஒரு தவறு செய்ததாகவும், அத்தவறிலிருந்து பின்னர் திருந்திக் கொண்டதாகவும் இவ்வசனமும் இதற்கு அடுத்த வசனமும் கூறுகின்றன.

எல்லா விரிவுரையாளர்களும் இதையொட்டி பொய்களையும், கற்பனைக் கதைகளையுமே எழுதி வைத்துள்ளனர்.

ஸுலைமானைச் சோதித்தோம் என்று இறைவன் கூறுகிறான். இதற்கு விளக்கம் கூற வந்தவர்கள் ஸுலைமான் நபி ஒரு மாபாவத்தைச் செய்து விட்டார். அதற்காக அவரை இறைவன் சோதித்தான் என்று கூறுகின்றனர்.

அவர் செய்த பாவம் என்ன?

அவர் இணைவைத்து விட்டார் என்று சிலர்!

மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் கூடிவிட்டார் என்று சிலர்!

மூன்று நாட்கள் மக்களுக்கு தீர்ப்பு வழங்காமல் தலைமறைவாகி விட்டார் என்று இன்னும் சிலர்!

ஒரு வழக்கு வந்த போது தமது மனைவியின் உறவினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்று மற்றும் சிலர்!

இன்னும் இது போல் பல்வேறு கற்பனைகளை எழுதி வைத்துள்ளனர்.

இதற்கு ஆதாரம் ஏதாவது காட்டுகிறார்களா? என்றால் கிடையாது. இக்ரிமா சொன்னார், முஜாஹிது சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பது தான் ஆதாரம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக எந்த ஒரு செய்தியையும் எவரும் கூறவில்லை.

 அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம் என்பதை விளக்கும் போது மாயாஜாலக் கதைகளை எழுதி வைத்துள்ளனர்.

முண்டம் என்று இங்கே கூறப்படுவது ஷைத்தானாம். ஸுலைமான் தப்புச் செய்ததால் அவரது சிம்மாசனத்தில் ஷைத்தானை அல்லாஹ் உட்காரச் செய்து விட்டான் என்பது இதன் விளக்கமாம்.

அதை மேலும் விளக்கும் போது ஸுலைமான் (அலை) அவர்கள் ஒரு மோதிரம் அணிந்திருந்தாராம். அந்த மோதிரத்தினால் தான் ஆட்சியில் அவர் இருக்க முடிந்ததாம். ஒரு நாள் மோதிரத்தைக் கழற்றி மனைவியிடம் கொடுத்து விட்டுக் குளிக்கச் சென்றார்களாம். இதை ஸக்ர் என்ற ஷைத்தான் அறிந்து கொண்டு ஸுலைமான் நபி வடிவத்தில் அவர்களின் மனைவியிடம் வந்து மோதிரத்தைக் கேட்டானாம். அவரும் அவனிடம் அதைக் கொடுத்து விட்டாராம். உடனே ஆட்சி ஷைத்தானின் கையில் வந்ததாம். ஷைத்தான் நாற்பது நாட்கள் ஆட்சி செலுத்தினானாம். பிறகு ஆட்சியை ஸுலைமான் நபியிடம் அல்லாஹ் வழங்கினானாம். இப்படிப் போகிறது கதை!

முண்டம் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ஜஸத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. ஜஸத் என்றால் உடல் என்று பொருள். முண்டம் என்பது அதன் பொருளன்று. முண்டம் என்பது தலையில்லாத உடலைக் குறிக்கும்.

நரம்பு, இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கொண்டதே ஜஸத் (உடல்). ஷைத்தானுக்கு இவையெல்லாம் கிடையாது. ஷைத்தானைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதும் கிடையாது என்ற சாதாரண உண்மையைக் கூட இவர்கள் அறியவில்லை.

நபியுடைய வடிவத்தை ஷைத்தான் எடுக்க முடியுமா? ஷைத்தான் ஸுலைமான் நபி வடிவத்தில் ஆட்சி செய்தால் அதற்கு மக்கள் கட்டுப்படுவார்கள். அவன் கூறுவதை மார்க்கம் என நம்புவார்கள். நபி உயிருடன் இருக்கும் போது மக்கள் இவ்வாறு வழிகெட்டுப் போகும் வகையில் இறைவன் இவ்வாறு செய்திருப்பானா?

ஆட்சி அதிகாரம் ஆகியவை ஒரு மோதிரத்தில் அடங்கியிருக்குமா? என்றெல்லாம் இந்த விரிவுரையாளர்கள் சிந்திக்கவில்லை.

இப்படிக் கொடுமையான விளக்கத்தை(?)த் தான் தப்ஸீர்களில் எழுதி வைத்துள்ளனர்.

இவை கற்பனைக் கதைகள் என்றால் உண்மையான சம்பவம் தான் என்ன?

ஒரு சம்பவம் தான் இதன் பின்னணியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? எந்தச் சம்பவமும் இல்லாமல் அந்த வசனத்தைச் சரியாக ஆராய்ந்தால் அந்த வசனத்தை அந்த வசனத்தில் இருந்தே உரிய விதத்தில் புரிந்து கொள்ள முடியும்.

ஸுலைமானை நாம் சோதித்தோம் என்பதை விளங்குவதற்கு எந்தக் கதையும் தேவையில்லை. செல்வத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிப்பான். அதைப் பிடுங்கியும் சோதிப்பான். உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்தும், கெடுத்தும் சோதிப்பான்.

ஸுலைமான் நபியை ஏதோ ஒரு வகையில் இறைவன் சோதித்திருக்கிறான் என்று விளங்கினாலே தெளிவு கிடைத்து விடுகின்றது.

அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்பதன் விளக்கம் என்ன? இதைப் பார்ப்பதற்கு முன் அந்தப் பொருள் சரியா? என்பதைப் பார்க்க வேண்டும். முண்டம் என்ற மொழிபெயர்ப்பு முற்றிலும் தவறாகும். உடல் என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.

அவரது சிம்மாசனத்தில் உடலைப் போட்டோம் என்றும் அந்த வசனத்திற்கு மொழி பெயர்க்கலாம்.

அவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தைப் போடுவதில் இருந்து தவறை உணர்த்த முடியாது. ஒருவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தைப் போட்டால் இது நம்முடைய தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக போடப்பட்டது என்று அவர் விளங்க மாட்டார்.

(அவரை) அவரது சிம்மாசனத்தில் உடலாகப் போட்டோம் என்றும் மொழிபெயர்க்கலாம்.

இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இந்த வாசகம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் இரண்டாவது மொழிபெயர்ப்பின்படி புரிந்து கொண்டால் இந்தக் கற்பனைக் கதைகளினால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கலாம். எளிதாக இந்த வசனத்தை விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு மனிதர் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். சரியான இயக்கம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி பேசும் போது வெறும் உடம்பு தான் கிடக்கிறது என்று கூறும் வழக்கம் அரபியரிடமும், ஏனைய மொழி பேசுவோரிடமும் உள்ளது. உயிர் இருந்தும் இல்லாதது போல் இருப்பதால் உயிரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உடல் மட்டுமே இருப்பதாக நாம் கூறுகிறோம்.

சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய ஸுலைமான் (அலை) அவர்களை வெறும் உடலாகச் சிம்மாசனத்தில் போட்டோம்.

இப்படிப் பொருள் செய்து பாருங்கள்! ஸுலைமான் நபியைச் சோதித்ததாக இதற்கு முன் கூறப்பட்டுள்ளது. அந்தச் சோதனை என்னவென்று இந்த வசனம் விளக்குவதைப் புரிந்து கொள்ளலாம். அவருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டு வெறும் உடம்பாக ஆகிவிட்டார். சிம்மாசனத்தில் வெறும் உடல் கிடத்தப்பட்டால் எவ்வாறு செயல்படாதோ அது போன்ற நிலையை அவர் அடைந்து விட்டார். உயிர் இல்லாத ஸுலைமானைப் போல் அவர் ஆகிவிட்டார் என்பது இதன் விளக்கமாகும்.

ஸுலைமானை நாம் சோதித்தோம். (அந்தச் சோதனையின் காரணமாக அவரது உடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு விட்டன) அவரை வெற்றுடலாகச் சிம்மாசனத்தில் போட்டோம்.

இது எவ்வளவு தெளிவாக, குழப்பமில்லாமல் இருக்கிறது.

பின்னர் அவர் நம்மிடம் மீண்டார் என்பதன் பொருள் என்ன?

நம்மிடம் என்பது மூலத்தில் இல்லாத வார்த்தையாகும். அனாப என்பது பழைய நிலைக்குத் திரும்புதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுகின்றது. நம்மிடம் என்பது இந்த இடத்தில் தேவையில்லாததாகும். பின்னர் அவர் பழைய நிலைக்குத் திரும்பினார் என்பதே சரியான பொருளாகும்.

இப்போது முழுமையாக அந்த வசனத்தின் பொருளைப் பாருங்கள்!

நாம் ஸுலைமானைச் சோதித்தோம். அவரை வெற்றுடலாகச் சிம்மாசனத்தில் போட்டோம். பின்னர் பழைய நிலைக்குத் திரும்பினார்.

இதை விளங்குவதற்கு இந்தக் கதைகள் அவசியம் தானா? திருக்குர்ஆன் விளங்க எளிதானது என்பதைப் பொய்யாக்கும் விரிவுரைகள் தேவை தானா?