394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது.

மூஸா நபி குறித்து அவரது சமுதாயம் எதைக் கூறி தொல்லைப்படுத்தினார்கள்? 

புகாரியில் பின்வரும் ஹதீஸில் கூறப்படுவது தான் காரணம் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

மூஸா நபியின் சமுதாயத்தினர் வெட்ட வெளியில் நிர்வாணமாகக் குளிப்பது வழக்கம். ஆனால் மூஸா நபியவர்கள் தனியாக ஒதுங்கி யாரும் பார்க்காத விதத்தில் குளிப்பார்கள். இதன் காரணமாக மூஸா நபிக்கு விரை வீக்கம் இருப்பதாக அவரது சமுதாயத்தினர் பேசிக் கொண்டனர். ஒரு நாள் மூஸா நபியவர்கள் தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளித்தனர். அப்போது அந்தக் கல் அவர்களது ஆடையுடன் ஓடியது. “என் ஆடை, என் ஆடை” எனக் கூறிக் கொண்டே மூஸா நபியவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்தனர். அப்போது மூஸா நபியவர்களுக்கு விரை வீக்கம் இல்லை என்று அவர்களின் சமுதாயத்தினர் விளங்கிக் கொண்டனர். அதைத் தான் இறைவன் குறிப்பிடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 278, 3404, 3407, 3152 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்

ஆனால் இது சரியான கருத்து அல்ல.

புகாரியில் இந்த ஹதீஸ் இடம்பெற்றாலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். அபூஹுரைரா (ரலி) வழியாக இருவர் அறிவிப்பதாக புகாரியில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் ஹஸன் பஸரி ஆவார். மற்றவர் கல்லாஸ் ஆவார்.

இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இருவருமே அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை. ஹஸன் பஸரி அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் எந்த ஹதீஸையும் செவியுறவில்லை; செவியுற்றதாக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் தவறானவை என்று பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். அபூஹுரைரா (ரலி)  கூறியதாக அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பாளரான கல்லாஸ் என்பாரும் அபூ ஹுரைராவிடம் எதையும் செவியுறவில்லை என அஹ்மத் பின் ஹம்பல், அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர்.

எனவே இது புகாரியில் இடம் பெற்றாலும் அறிவிப்பாளர் இடையில் விடுபட்ட பலவீனமான ஹதீஸாகும்.

மேலும் கருத்தின் அடிப்படையிலும் இது சரியானதல்ல.

நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.

என்று இவ்வசனம் கூறுகிறது. மூஸா நபி மீது இஸ்ரவேலர்கள் சுமத்திய பழியில் இருந்து அவரை விடுவித்தான் எனக் கூறி விட்டு அவர் அல்லாஹ்விடம் தகுதி உடையவராக இருந்தார் என்றும் அல்லாஹ் கூறுகிறான். மூஸா நபியின் தகுதியைக் குறைக்கும் பழியைத் தான் அவரது சமுதாயத்தினர் சுமத்தி உள்ளனர். அந்தப் பழியைத் தான் அல்லாஹ் துடைத்து எறிந்தான்.

ஒரு மனிதருக்கு விரை வீக்கம் இருப்பது அவரது தகுதியைக் குறைக்குமா?

இறைத்தூதர்களின் நாணயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் இறைத்தூதர்களின் பிரச்சாரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் குறைகள் பிரச்சாரப் பணியைப் பாதிக்காது. எத்தனையோ இறைத் தூதர்களுக்கு பலவிதமான நோய்கள் இருந்துள்ளன. அதனால் அவர்களின் தூதுப்பணிக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டதில்லை.

ஆனால் இறைத்தூதர்களின் நன்னடத்தைக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் தூதுப்பணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே பிரச்சாரத்தைப் பாதிக்கும் பழியைத் தான் அவர்கள் சுமத்தி இருப்பார்கள்.