403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.

தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.

இஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

பெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5136, 6968, 6970, 6971)

பெண்ணின் சம்மதமின்றி செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்துச் செய்யவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5139, 6945, 6969)

அதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையினால் பெண்கள் ஏமாற்றப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காக தந்தை, சகோதரன், ஜமாஅத் தலைவர் போன்ற பொறுப்பாளர்களிடம் பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே திருமணம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

அது போல், இஸ்லாமின்  நெறிமுறைகளை மீறாத வகையில் பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால், அந்தப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்காமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது பெற்றோர் அல்லது அவளது பொறுப்பாளர்களின் கடமை ஆகும்.