455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்?

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்மவேலை அல்ல. ஈஸாக்கைத் தான் என்று கிறித்தவர்கள் கருதுகின்றனர். பைபிளில் இப்படித் தான் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எனவே அது குறித்த உண்மையை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பைபிளில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அது பிற்காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டதாகும். ஈஸாக் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் தான் அவரது வழித்தோன்றலான ஏசுவுக்கு அதில் சிறப்பு சேரும். இஸ்மாயீல் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அதன் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போய் விடும் என்று அஞ்சி பைபிளில் கைவரிசை காட்டி பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் ஈஸாக் என்று மதகுருமார்கள் எழுதிக் கொண்டனர்.

பைபிளைக் கருத்தூன்றி படிப்பவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியும். ஈஸாக் பலியிடப்பட்டதாகச் சொல்லும் வசனங்களைப் பாருங்கள்.

1. இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆதியாகமம் 22:1,2

12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:12

இது தான் ஈஸாக் தான் பலியிடப்பட்டவர் என்பதற்கு பைபிளில் உள்ள சான்றாகும்.

மேற்கண்ட வசனங்களில் பலியிடப்பட்டவர் ஈஸாக் என்று சொல்லப்பட்டாலும் அவருக்கு அடைமொழியாக ஏகசுதன் என்று சொல்லப்பட்டுள்ளது.

சுதன் என்றால் மகன் என்று பொருள். ஏக என்றால் ஒரே என்று பொருள். ஏகசுதன் என்றால் ஒரே மகன் என்று பொருள்.

ஆப்ரஹாம் பலியிட முயன்ற போது அவருக்கு ஒரே மகன் மட்டும் இருந்தால் தான் ஏகசுதன் என்று சொல்லைப் பயன்படுத்த முடியும்.

ஈஸாக் மூத்த மகனாக இருந்தால் தான் இது சாத்தியமாகும். இஸ்மாயீல் மூத்த மகனாகவும் ஈஸாக் இரண்டாம் மகனாகவும் இருந்தால் ஈஸாக் ஏகசுதனாக ஆக மாட்டார். ஏனெனில் அவருடன் இஸ்மாயீலும் இருப்பதால் அப்படிக் கூற முடியாது.

யார் மூத்த மகனாக இருக்கிறாரோ அவர் தான் ஏகசுதனாக இருக்க முடியும்.

இப்போது கீழ்க்கண்ட வசனங்களைப் பாருங்கள்!

16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்ற போது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 16:16

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26. ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்த சேதனம் பண்ணப்பட்டார்கள்.

ஆதியாகமம் 17:24,25

4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.

5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 21:4,5

இந்த வசனங்களில் இருந்து தெரிவது என்ன?

ஆப்ரஹாமின் 86 வயதில் அவருக்கு இஸ்மாயீல் பிறந்துள்ளார். ஆப்ரஹமின் 100 வயதில் ஈஸாக் பிறந்துள்ளார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அதாவது இஸ்மாயீலை விட ஈஸாக் 14 வயது இளையவர் ஆவார்.

14 ஆண்டுகளாக இஸ்மாயீல் மட்டுமே இப்ராஹீமுக்கு ஒரே மகனாக ஏகசுதனாக இருந்துள்ளார். ஈஸாக் ஒரு சந்தர்ப்பத்திலும் ஆப்ரகாமுக்கு ஏகசுதனாக இருக்கவில்லை. இருக்க முடியாது. அப்படியானால் ஏகசுதன் இஸ்மாயீல் என்று இருந்ததைத் திட்டமிட்டு ஈஸாக் என்று மாற்றியுள்ளனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லை நீக்க மறந்து மாட்டிக் கொண்டனர் என்பதும் இதில் இருந்து உறுதியாகின்றது.

எனவே பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மாயீல் தான் என்பதும், இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை வந்து விடும் என்ற காரணத்தால் இஸ்மவேல் என்ற சொல்லை நீக்கி விட்டு அந்த இடத்தில் ஈஸாக் என்ற சொல்லை வைத்து விட்டனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லில் இருந்து உறுதியாகிறது.

இஸ்மாயீல் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் அவர் மகன் என்ற அந்தஸ்துக்கு வர மாட்டார் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் இஸ்மாயீலும், ஈஸாக்கும் ஆப்ரஹாமின் மகன்கள் என்று பின்வரும் பைபிள் வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

9. அவன் குமாரராகிய ஈசாக்கும், இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 25:9

ஆப்ரஹாமுக்கு ஈஸாக் எப்படி குமாரனாக இருந்தாரோ, அது போல் இஸ்மவேலும் அவரது குமாரனாக இருந்தார் என்பது இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.